தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

ஏழாம் அறிவு - படைப்பின் அடிப்படைகளைப் புறக்கணிக்கும் சினிமா

Sunday, November 13, 2011



கருணாகரன்

சில காலங்களுக்கு முன்னர் ‘ஆறாந்திணை’ என்று புதியதொரு திணையைப் பற்றிச் சேரன் அறிமுகப்படுத்தினார். தமிழில் அதுவரை ஐந்து திணைகளைப் பற்றியே பேசப்பட்டு வந்தது. புலம்பெயர்ந்து வாழும் புதிய களத்தைச் சேரன் ஆறாந்திணை என்றார். அந்த ஆறாந்திணையின் அனுபவங்களும் அறிகையும் ஒரு வடிவமாகி, இன்று தமிழுடன் இணைந்து விட்டன. அதற்கு முன்னர் தமிழர்களின் வாழ்வியற் பரப்பும் வாழ்வனுபவங்களும் பெரும்பாலும் ஐந்து திணைகளுக்குள்தான் இருந்தன. குறிப்பாகப் பனி விழும் பருவ மற்றும் பிரதேச அனுபவங்கள் முன்னைய தமிழ் வாழ்வில் இருக்கவில்லை. ஆனால், இன்று அந்த அனுபவங்கள் தமிழில் தாராளமாகவே உள்ளன. ஒரு படைப்பாளியின் நுண்ணுணர்கை இதைச் சரியாக முன்னுணர்ந்தது.

இப்பொழுது ஆறறிவு என்று சொல்லப்படுவதற்கு அப்பால், இன்னொரு புதிய அறிகையை ‘ஏழாம் அறிவு’ என்று உணர்த்தும் பாவனையில் பல வகையான முன்னறிவித்தல்கள், விளம்பரப்படுத்தல்களுடன் தமிழ்ச் சினிமா ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பலவும் வந்து கொண்டேயிருக்கின்றன. சில விமர்சனங்கள் சற்று நிதானமானவை. பலதும் உணர்ச்சிகரமானவை. ஒரு நண்பர் சொல்வதைப் போல ‘ஏழாம் அறிவைப் பற்றி ஐந்தறிவுத்தனமாகப் பேசுகிறார்கள்’ பலரும்.

ஏனைய வழமையான தமிழ்ப் படங்களைப் போலவே வியாபார நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ஏழாம் அறிவு. பெரும்பாலான - சாதாரண தமிழ்ச்சினிமா வாய்ப்பாட்டை அப்படியே பேணியுள்ளது ஏழாம் அறிவு. (டூயட்) பாடல்கள், காதல், சண்டைக்காட்சிகள், கொஞ்சம் நகைச்சுவை.... அப்படி வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொள்ளும்போது அதற்குத் தோதாக ஒரு எல்லைவரையில் ‘இன உணர்வு’ என்ற அம்சமும் கலக்கப்பட்டுள்ளது. இந்த ‘இன உணர்வு’ என்ற அம்சம்தான் இங்கே வியாபாரத்துக்கான ஒரு முக்கிய உத்தியாக இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். முருகதாஸ் தமிழ்ச் சூழலை நன்றாகவே விளங்கி வைத்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படம் நல்ல ஆதாரம்.
எதையும் மேலோட்டமாகப் பார்க்கும் இயல்பைக் கொண்;டவர்கள் தமிழர்கள். இன உணர்வு என்று வந்து விட்டாற்போதும் அதற்குப் பிறகு அவர்கள் எதையும் நிதானிக்க மாட்டார்கள். இந்த இன உணர்வைக் கொண்டாடுவதற்காகவே ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இன உணர்வு என்ற விசயத்துக்காக இலவசமாகவே பிரச்சாரம் செய்யும். அதன்மூலம் மேலதிகமான ஆதரவை வழங்கும். எதிராக வருகின்ற விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் தாமாகவே முன்னின்று கட்சி கட்டிக்கொண்டு எதிர்த்து முறியடிக்க முயற்சிக்கும். இந்த நிலையில் படத்தைப் பற்றிய பேச்சுகளும் அறிமுகங்களும் தாராளமாக, தானாகவே நடந்து கொண்டிருக்கும். மேலும் இந்த இன உணர்வு என்ற அம்சம் நிச்சயமாக ஒரு பெருந்தரப்பினரின் அபிமானத்தைப் பெற்றுத் தரும். அது மட்டுமல்ல புலம்பெயர்ந்திருக்கிற ஈழத்தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்தியத்தமிழர்களிடையேயும் இந்த இன உணர்வு என்ற விசயம் பெரிதாக எடுபடும். அவர்கள் தாம் பிறந்த நாட்டுக்கு வெளியே இருப்பதால், சொந்த நாட்டைப் பற்றியும் தமிழரின் சிறப்பைப் பற்றியும் ஏதாவது செய்திகள் வரும்போது அது அவர்களைக் கவர்ந்து விடுகிறது. தங்களுடைய சூழலுக்கு வெளியே – அந்நியச் சூழலில் இருப்பதன் காரணமாக உருவாகியிருக்கும் ஒரு வகையான உளவியல் இது.

நாட்டுக்கு வெளியே இருப்பவர்களிற் பெரும்பாலானவர்களின் உளவியல் இந்தமாதிரித்தான் செயற்படுகிறது என்பதற்கு இணையத்தளங்களிலும் முகப்புத்தகங்களிலும் எழுதப்பட்ட – எழுதப்பட்டு வரும் - கருத்துகள் ஆதாரம்.

ஆகவே இந்த மாதிரியான விசயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்குத் தோதாக இந்தப் படத்தை எடுத்துள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் ‘ஏழாம் அறிவு’ இரண்டு நிலைகளிலும் படத்தை உருவாக்கியவர்களுக்கு வெற்றியே. முருகதாஸ் கூட்டணி எதிர்பார்த்ததைப்போல ‘ஏழாம் அறிவு’ தமிழ்ப் பரப்பில் வெற்றிகரமாக அறிமுகமாகியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது.
ஆனால், தமிழ்ப் பரப்பில் இந்தப் படத்தைப் பற்றி நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்கள் மிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிகழ்கின்றமை மிகுந்த கவலையையே அளிக்கின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் நமது நண்பர் சொன்னதைப் போல ஐந்தறிவுத்தனமானவையாகவே அமைந்துள்ளன. ஆகவே இந்தப் பத்தி அந்த நிலைமையைப் பற்றியும் ஏழாம் அறிவு திரைப்படத்தின் அடிப்படையைப் பற்றியும் தன்னுடைய பார்வையை முன்வைக்க முயற்சிக்கிறது.

00

ஏழாம் அறிவு ஒரு பக்கத்தில் தமிழர்களின் அறிவையும் வீரத்தையும் பண்பாட்டுச் சிறப்பையும் பேசுகிறது. மறுபக்கத்தில் அத்தகைய வரலாற்றுச் சிறப்பையுடைய தமிழின் நிலையும் தமிழர் வாழ்வும் இன்று வீழ்ந்து பட்டிருக்கிறது என்பதையும், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இதற்காக அது தமிழரின் வரலாற்றுக் குறிப்பொன்றைப் பின்தொடர்ந்து தனக்கான வடிவத்தை உருவாக்கியுள்ளது.

இந்த அடிப்படையில், தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசனாகிய போதி தர்மர், மருத்துவம், வர்மக்கலை போன்றவற்றில் அசாத்தியமான திறமையைப் பெற்றிருந்தார். இவருடய ஆற்றல் சீனாவரை பரவிப் புகழடைந்திருந்தது. இப்போதும் சீனர்கள் போதி தர்மரை மதித்து வணங்குகின்றனர். அத்தகைய சிறப்பையும் பெருமையையும் கொண்ட தமிழர்கள் இன்று தோற்றுப் போனவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே படத்தின் மையப் பேசுபொருள்.

இன்று இந்தப் படம் வெளிவந்ததற்குப் பிறகு, ஏராளம் கவனக்குறிப்புகள் எழுதப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் போதி தர்மரைப் பற்றி. படம் வலியுறுத்தும் தமிழி உணர்வைப் பற்றி. தமிழ்த் தேசியத்தின் எழுச்சியைப் பற்றி. இத்தகைய கவனக்குறிப்புகளை எழுதத் தூண்டியதில் இந்தப் படத்துக்கும் இயக்குநர் முருகதாஸ_க்கும் ஒது முக்கியத்துவம் உண்டு.
வரலாற்றுணர்வை ஏற்படுத்தியதிலும் வரலாறு பற்றிய அறிவு முக்கியமான ஒன்றென்றும், வரலாற்றில் எண்ணற்ற புதினங்களும் முக்கிய அம்சங்களும் உள்ளன என்றும் கருதும் நிலையை இளைய தலைமுறையினரிடத்திலே ஏற்படுத்த முனைந்ததிலும் முருகதாஸ் கவனத்தைப் பெறுகிறார்.

அதேவேளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு முரண் நீண்டகாலமாகவே உள்ளதென்றும் இனி அது கூர்மையடைக் கூடிய நிலை உண்டென்றும் முருகதாஸ் உணர்த்துகிறார். மேலும் ஈழத்தமிழரின் போராட்டத்தை – புலிகளை ஒடுக்குவதில் தனியே இலங்கை அரசு என்ற ஒரு சக்தி மட்டும் ஈடுபடவில்லை. பல நாடுகள், பல சக்திகள் சம்மந்தப்பட்டிருந்தன என்றும் சொல்கிறார் முருகதாஸ். அவருடைய புரிதல்கள் சரியான பார்வையைக் கொண்டுள்ளன.

ஆனால், அதற்கப்பால், படத்தின் முழு வடிவமானது முருகதாஸ் என்ற கலைஞனைக் குறித்த கேள்விகளையும் ஒரு சினிமா என்ற படைப்பின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கக் கோருகிறது.

‘தமிழ் அறிவையும் வீரத்தையும் இழந்து இன்று வீழ்ந்து பட்டிருக்கிறோம். அண்மையில் இலங்கையில் நடந்த போரிலும் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் வீரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. தமிழ் வீரத்தை மீட்டெடுத்து மீண்டும் எழுச்சிபெறும் தமிழ் வாழ்வையும் வரலாற்றையும் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க முடியும். அதற்கான அடிப்படைகள் வரலாற்றிலும் விஞ்ஞானத்திலும் நிச்சயமாகவே உண்டு’ என்று சொல்லும் இந்தப் படத்தைப் பற்றி மெய்சிலிர்த்துப் பலரும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பாராட்டுகளைப் பொழிந்து தள்ளுகிறார்கள். படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள் என்று இணைய வழியாகவும் தொலைபேசிகளின் ஊடாகவும் தூண்டற்செயற்பாடுகள் தொடர்கின்றன. முருகதாஸ் தமிழ்த் தேசியத்தின் தூண்களில் ஒருவராக சித்திரிக்கப்படுகிறார்.

ஏழாம் அறிவு மையப்படுத்தும் இந்தக் கருத்தைப் பலரும் பல விதமாகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். போதி தர்மனின் கதையைத் தவிர்த்து. பதிலாக சங்ககாலத்திலிருந்து சோழர் காலம் உள்ளடங்கலாக தமிழரின் பொற்காலங்களை ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். (சாண்டில்யனின் ‘கடற்புறா’ தனக்கொரு தூண்டலைத் தந்ததாகவும் அத்தகைய வரலாற்று நூல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டென்றும் விடுதiலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் கூறியிருந்ததை இங்கே நாம் இணைத்துப் பார்ப்பது பொருத்தம்). மேலும் ‘புகழுடைத் தமிழன் பிணியிடை வீழ்ந்து கிடப்பதோ’ என்றவாறாக.

ஆகவே படத்தின் செய்தி ஒன்றும் புதியதல்ல. ஆனால், இந்தக் கருத்தை சற்று வேறு விதமாகக் கொஞ்சம் கவர்ச்சிகரமாக, சினிமா என்ற வெளிப்பாட்டுச் சாதனத்தின் தன்மைக்கேற்ப புதிதாக – மீண்டும் சொல்லியிருக்கிறார் முருகதாஸ். அதற்கு அவர் எடுத்தாண்ட ஆயுதங்களில் ஒன்று வரலாற்றிலிருந்து போதி தர்மர். மற்றும் விஞ்ஞானத்திலிருந்து மரபணுத் தொழிற்பாடு.
மற்றது, கவனத்திற்காக அவர் இலங்கையில் நடந்த போரையும் அங்கே நடந்த அநீதியையும் சாரப்படுத்திச் சொல்லும் விதம்.

‘தமிழன் எல்லா இடத்திலும் அடிவாங்குகிறான். இலங்கையில், தமிழ் வீரத்தை ஒரு நாடு மட்டும் மோதித் தோற்கடிக்கவில்லை. ஒன்பது நாடுகள் சேர்ந்து தோற்கடித்தன’ என்ற மாதிரியான விசயங்கள் இன்றைய நிலையில் தமிழ் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. வன்னிப் போரின்போது நடந்த கொடுமைகள் உலகெங்கும் உள்ள தமிழ்மக்களின் மனதில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியது. அந்த துயர நிலையிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. பதிலாக அவர்கள் இன்னும் அந்த நிகழ்வுகளின் தாக்கத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சனல் 04 ஐயும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையையும் வரவேற்கிறார்கள். மேலும் போர்க்குற்ற விசாரணையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையில், படத்தில் பேசப்படும் சமகால ஈழ நிலவரம், தமிழர் நிலவரம் ஆகியவற்றைப் பற்றிய பேச்சு திரையில் வரும்போது அது அதிக கவர்ச்சியைக் கொடுக்கிறது. இதுகூட ஆற்றாமையின் வெளிப்பாடுதான். உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் கோபத்துக்கான ஒரு வடிகால்.

ரஜனியின் படங்களில் அவர் பேசுகிற ‘பஞ்ச்’ வசனங்களைப் போல இந்த வசனங்களைச் பேசுகிறார் சூர்யா. ரஜனியின் வசனங்கள் அரசியலில் பாதிப்படைந்தவர்களின் உளவியலை மையப்படுத்தியதாக இருக்கும். அல்லது சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலை மையப்படுத்தியதாக இருக்கும். இந்த உபாயத்தையே முருகதாஸ_ம் பயன்படுத்தியுள்ளார்.
‘இந்த உலகத்துக்கே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள்;’ என்று சொல்வதெல்லாம் உணர்ச்சி வசப்படும் தமிழபிமானிகளின் உச்சியிற் குளிரைக் கொட்டுகிறது. குளிர் நாடுகளில் உள்ளவர்களுக்கு உடம்பிற் சூடேற்றுகிறது. ஆகவே இவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரப்படுத்துகிறார்கள்.

தமிழர்களிடம் சிறப்புகளும் தகுதிகளும் ஏராளம் உள்ளன. செழுமையான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதிற் பிரச்சினையில்லை. இவையெல்லாம் உண்மையே. ஆனால், அதேயளவுக்கு அவர்களிடமும் ஏராளம் குறைபாடுகள் உள்ளன. அந்தக் குறைபாடுகளே தமிழர்களைத் தோற்கடித்துக் கொண்டிருக்கின்றன. இதை ‘ஏழாம் அறிவு’ புலப்படுத்தியிருக்குமானால், அதுவே பயனுடையதாக இருந்திருக்கும். அது ஓரளவுக்கு புதிய சேதியாகவும் அவசியமான ஒன்றாகவும் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களுக்குப் பிரயோசனமாகவும் அமையும். அல்லது ஏழாம் அறிவை முன்வைத்து இந்த விசயங்களைப் பேசியிருந்தாலும் வரவேற்றிருக்கலாம். ஆனால், அப்படியெதுவும் நிகழவில்லை. அப்படி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை எதிர் மனோபாவத்தோடு அணுகும்போக்கே தொடர்கிறது. இதுவே தமிழ்ச் சூழலில் நிலவும் வீழ்ச்சிக்கான கருவறைச் செயற்பாடாகும்.
ஆகவே இந்த அகப் புற நிலைமையில் ஏழாம் அறிவைக் குறித்து மேலும் பேசும்போது இது தொடர்பாக நாம் சில கேள்விகளை இங்கே முன்வைக்கலாம்.

1. இந்தப் படத்தைப் பார்க்கும் பிற மொழி பேசும் இந்தியர்களின் நிலைப்பாடு என்ன?

2. இந்தப் படத்தைப் பார்க்க நேரும் சீனர்கள் எத்தகைய மனநிலையைப் பெறுவர்?

3. தமிழர்கள், இந்தியர்கள், சீனர்கள் என்ற பரப்புக்கு வெளியே இந்தப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையும் புரிதலும் எவ்வாறிருக்கும்?

இந்தப் படம் ஏனைய இந்தியச் சமூகத்தினரையும் விட தமிழர்கள் வீரம் பொருந்தியவர்கள், அறிவிற் சிறந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சீனாவிற் பவியிருந்த கொள்ளை நோயினால் இந்தியாவுக்கே ஆபத்து வரும் என்று தெரிந்து, அதைக் கட்டுப்படுத்தவே போதி தர்மர் அங்கே செல்கிறார். ஆகவே, தமிழர்கள் அந்தக் காலத்திலேயே இந்தியாவை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கே வரலாற்றில் முதன்மைப் பாத்திரமுண்டு என்று கூறுவது.

அதேவேளை இப்போதும் சீனாவினால் இந்தியாவுக்கு வரவுள்ள ஆபத்தை தமிழர்களே இனங்கண்டு அதை முறியடிக்கிறார்கள். வரலாற்றின் நாயகனான போதி தர்மர் (சூர்யா) வரலாற்றை ஆய்வு செய்யும் தமிழ் மாணவியான ஸ்ருதி ஹாசன், தற்போது இந்த ஆபத்தை முறியடிக்கக்கூடிய நிலையில் போதி தர்மரின் வம்சத்தில் இருக்கும் இளைஞன் (சூர்யா). ஆகவே இந்தியாவைக் காப்பாற்றும் பிரதான பாத்திரத்தை எப்போதும் வகிப்பவர்கள் தமிழர்களே என்ற சித்திரத்தை உருவாக்க முனைதல்.

இது ஏனைய இந்தியர்களைக் கலவரப்படுத்தக் கூடியது. இந்தியப் பண்பாட்டிலும் பிராந்திய வாழ்க்கையிலும் அதனுடைய அரசியல் மற்றும் அறிவியலிலும் பிற சமூகங்களுக்கும் பங்களிப்புகள் உண்டு. ஆனால், தங்களுடைய அத்தகைய பங்களிப்புகளையும் ஆற்றலையும் இந்தப் படம் திட்டமிட்டு மறைப்பதாகவே அவர்கள் உணர்வர். இது அவர்களை நிச்சயமாக எதிர்நிலைக்குக் கொண்டு போகும்.

ஆகவே பிற இந்தியச் சமூகங்களுக்கிடையிலான விரிசல்களையும் முரண்களையும் ஏற்படுத்தக் கூடிய கூறுகளை ஏழாம் அறிவு கொண்டுள்ளது. ஒரு கலைப்படைப்பு கலகத்தை ஏற்படுத்த வல்லது. மனதில் ஏற்படுத்தும் கலகமே எழுச்சிக்கும் தூண்டலுக்கும் வழிசெய்யும். ஆனால், அது முரண்களை ஏற்படுத்தக் கூடாது. முரண்களையும் விரிசல்களையும் உருவாக்குவது கலைஞனுடைய செயற்பாடும் அல்ல. அநீதிக்கு எதிரான குரலும் பதிவும் வேறு. முரண்களை உருவாக்கும் அடிப்படை வேறு. இரண்டையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே முருகதாஸ் பிளஸ் ஏழாம் அறிவு ஆகிய இரண்டு பாத்திரங்களும் இந்தியச் சமூகங்களிடையேயும் முரண்களை உருவாக்குகின்றன. அதேபோல சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்களைப் பகை உணர்வுடன் நோக்குவதன் மூலமாக இருக்கும் முரண்கள் மேலும் கூர்மைப்படுத்தப்படுகின்றன.

எனவே ஒரு கலை ஊடகம் என்ற வகையில் ஏழாம் அறிவின் தூண்டல் தமிழர்களை அடிப்படை வாதத்தை நோக்கித் தள்ளும் அதேவேளை, பிற சமூகங்களை எதிர்நிலைக்குத் தள்ளுவதால், படைப்பின் அடிப்படையில் இருந்து வீழ்ச்சியடைகிறது.

இதற்கு மேலும் ஆதாரமாக நாம் முன்வைப்பது, இந்தப் படம் கூறும் பகுதிகளையே.
போதி தர்மன் காலத்தில் இருந்து இன்றுவரையிலும் சீனர்கள் அறிவிற் குறைந்தவர்கள் என்றும் சுயநலக்காரர்கள் என்றும் தங்களின் நலனுக்காக இந்தியாவை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள் என்றும் காட்டப்படுகிறது.

போதி தர்மர் சீனாவுக்குப் போகும்போது சீனக்கிராமமொன்றில் மக்களின் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. அவர்கள் அங்கே நிலவும் ஒரு கொடிய நோய்க்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். அந்த நோயிலிருந்து மீள்வதற்கான வழியை சீனாவில் யாரும் காட்டவில்லை. அதேவேளை அங்கே செல்லும் போதி தர்மனின் வருகை சீனாவுக்கு ஆபத்தானது என்று அங்குள்ள ஞானிகளும் சோதிடர்களும் சொல்கின்றனர். இந்தக் கூற்றை நம்பிய சீன மக்கள் போதி தர்மரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வெறுக்கின்றனர்.

ஆனாலும் தன்னுடைய மருத்துவ அறிவினால் அந்த நோயைக் கட்டுப்படுத்துகிறார் போதி தர்மர். அதற்குப் பிறகும் அந்த மக்கள் போதி தர்மரைப்பற்றிப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அந்த மக்களை விட்டு அவர் வெளியேறுகிறார். தான் வெளியேறும்போது அந்தக் கிராமத்துக்கு இன்னொரு ஆபத்து வரப்போகிறது என்பதை போதி தர்மர் சொல்கிறார். அது மனிதர்களால் வருகின்ற ஆபத்து. வேற்றாள்களின் படையெடுப்பால் வரும் ஆபத்து.
அந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அந்தக் கிராமத்திற்கில்லை. அதனால் வேற்றாள்களினால் அந்தக் கிராமம் சிதைக்கப்படுகிறது. இந்த நிலையில் போதி தர்மரே தன்னுடைய வர்மக்கலையின் மூலமாக பெற்றுக்கொண்ட தற்காப்பு மற்றும் போரிடும் ஆற்றலின் மூலம் அந்த ஆபத்தைத் தனியொருவராக நின்று முறியடிக்கிறார். அதற்குப் பிறகே அந்த மக்களுக்கு போதி தர்மரைப் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. பிறகு அவர்கள் அவரை நேசிக்கின்றனர். அவரிடமிருந்து அவர்கள் மருத்துவத்தையும் வர்மக்கலையையும் கற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் போதி தர்மர் இந்தியாவுக்கு – காஞ்சிபுரத்துக்குத் திரும்ப வேண்டியேற்படுகிறது. அதற்கு அவர் ஆயத்தமாகிறார். ஆனால் போதி தர்மர் அங்கிருந்து வெளியேறினால் தமக்கு ஆபத்துகள் நேரிடும். நோயோ பிற நெருக்கடிகளோ வராமல் தடுக்கும் வல்லமையுள்ள அவரை எந்த நிலையிலும் வெளியேறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று அங்குள்ள முதியோர் சொல்கின்றனர். இதனையடுத்து போதி தர்மருக்கு விசம் கொடுத்து அவரைக் கொல்ல முயற்சி செய்கின்றனர். போதி தர்மர் இறந்தால், அவருடைய சடலத்தை தங்களுடைய மண்ணிலே புதைத்து விடலாம். அப்படி அந்தச் சடலம் புதைக்கப்பட்டால் தமக்கு எத்தகைய தீங்குகளும் நேராது என்ற நம்பிக்கை சீனர்களுக்கு.

ஆகவே போதி தர்மருக்கு நஞ்சூட்டப்படுகிறது. ஆனால், தனக்கு நஞ்சைத் தருகிறார்கள் என்பதைப் போதி தர்மர் அறிந்து விடுகிறார். ஆனாலும் அதைத் தெரிந்து கொண்டே அவர் அந்த நஞ்சினை அருந்தி இறந்து விடுகிறார். அவருடைய சடலம் அங்கே புதைக்கப்படுகிறது.
என்ன அபத்தம் இது?

சீனர்கள் மூடர்களாகவும் வஞ்சகக்காரர்களாகவும் இருக்கிறார்கள். தங்களுடைய சுய நன்மைக்காகத் தங்களைக் காப்பாற்றியவருக்கே நஞ்சூட்டும் காரியத்தைச் செய்யும் ஒரு மக்கட்கூட்டமே சீனச் சமுதாயம் என்று முருகதாஸ் சொல்கிறார். அதை ஏனைய தமிழ்ப் பெருங்குடி மக்கள் உளம் பூரித்து வரவேற்கிறார்கள். பொதுவாக அநேகமான இந்தியவர்களுக்கும் சீனாவைப் பற்றி இப்படிச் சித்திரிப்பதில் மகிழ்ச்சி ஏற்படலாம். ஏனெனில் பாகிஸ்தானையும் சீனாவையும் எதிர்ப்பதே இந்திய அரசியலின் பொது அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது.

அத்துடன் இன்று வளர்ச்சியடைந்து வரும் சீனப் பொருளாதாரமும் சீன விஸ்தரிப்பு நிலையும் இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்ற வகையிலும் எதிர்காலத்தில் சீனாவும் இந்தியாவும் பொருதிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கருதப்படும் நிலையிலும் சீனாவைப் பற்றிய முருகதாஸின் சித்திரிப்பு விரும்பப்படும்.

இத்தகைய சித்திரிப்பு முறைகள் அல்லது காண்பித்தல்கள் அமெரிக்க ஹொலிவுட் படங்களிலும் தாராளமாக இருப்பதுண்டு. எல்லாவற்றிலும் எப்பொழுதும் வல்லவர்கள் - விண்ணர்கள், அமெரிக்கர்கள் என்ற மாதிரி அந்தப் படங்கள் இருக்கும். ஏறக்குறைய இதேபோன்ற படங்களை அர்ஜூனும் விஜயகாந்தும் தாராளமாகவே நடித்திருக்கிறார்கள். இந்தியாவைக் காட்டிக்கொடுக்கும் துரோகப் பாத்திரங்களில் நடிக்காத வில்லன் நடிகர்களே தமிழில் இல்லை எனலாம். இங்கும் அதே கதைதான்.

இதை விட தமிழ்ப் பொது வெளியில் நிலவும் அரசியற் புனைவுகளுக்கு நிகராக இந்திய, சீனப் பிராந்தியத்தில் மிகப் புத்திபூர்வமாகவும் வீரத்தோடும் இருந்தவர்கள் தமிழர்களே என்பதைப் படம் வலியுறுத்துகிறது.

அவ்வாறு வலியுறுத்துவதாயின் ஏனைய இனத்தவரையும் விடத் ‘தமிழர்கள் மேலோங்கிகள்’ என்ற பொருளை இது மறைமுகமாகச் சொல்கிறது. இது அடிப்படைவாதத்தின் மூலக்கூறாகும். பிற சமூகங்களைக் கீழிறக்கிச் சுருக்கியும் தம்மை மேல்நிலைப்படுத்தி விரித்தும் பேசும் எவரும் அடிப்படைவாதத்தின் கூறுகளையே கொண்டிருப்பர்.

தமிழ் அரசியலிலும் அதனுடைய பொதுச் சமூக உளவியலிலும் ஊடுருவிப் பரந்திருக்கும் கொடிய நோய் இது. இந்த நோயே தமிழர்களைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் தங்களை விட ஏனையவர்கள் கீழானவர்கள், சிறியர்கள் என்ற சொல்லும்போதெல்லாம் ஏனையவர்கள் அவர்களை விட்டுத் தூர விலகி நிற்கின்றனர். பல வேளைகளிலும் எதிர்நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

முருகதாஸ் சொல்ல வருவதைப் போல அல்லது படத்தில் சூர்யா சொல்வதைப் போல ஒன்பது நாடுகள் சேர்ந்து மட்டும் தமிழர்களைத் தோற்கடிக்கவில்லை. தமிழர்களிடம் உள்ள இந்தக் குறைபாடும் சேர்ந்தே அவர்களைத் தோற்கடிக்கிறது. தங்களைப் பற்றிய அதீதமான புனைவுகளும் மிகை எண்ணங்களு ம் சேர்ந்தே அவர்களைத் தோற்கடிக்கிறது. ஈழத்தில் நடந்த போராட்டத்தின் போதும் விடுதலைப் புலிகளின் மிக வலிமையான போராட்டத்தை அந்தப் போராட்டத்திலிருந்து பலவீனமான கூறுகளே தோற்கடித்தன. ஏனெனில் முரண்களை உருவாக்குவதன் மூலம் பகைமையைப் பெருக்கி, பகைவர்களையும் உருவாக்கும் ஒரு பொறிமுறை தமிழ்ச் சிந்தனையில் பதிந்துள்ளது. இதுவே இந்தப் படத்திலும் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. படத்தைப் பற்றிய பெரும்பாலான ஆதரவுக் கருத்துகளிலும் மையங்கொண்டுள்ளது.

ஆகவேதான் ஏழாம் அறிவைப் பார்க்கும் பிற இந்தியச் சமூகத்தினரும் சீனர்களும் தமிழர்களைப் பற்றி, தமிழர்களின் சிந்தனையைப் பற்றி நிச்சயமாக எதிர்நிலைப் புரிதலையே கொள்வர் என்று கூறுகிறேன்.

00

உயிர் அறுபடும் வலி - தீபச்செல்வன் கவிதைகள்

Friday, August 13, 2010

- சித்தாந்தன்-

படைப்பு மனநிலை என்பது எப்போதும் ஒரு படைப்பாளியுடன் கூட இருப்பதில்லை. அது புறத்தாக்கங்களாலும் அகத்தாக்கங்களாலும் விழைவது. சாதாரணமாக உன்னத படைப்புக்கள் என்பவை உன்னதமான படைப்பு மனத்தின் பிரதிபலிப்புக்கள்தான். உன்னதமென இங்கு குறிப்பிடப்படுவது ‘புனிதம்’ என்ற பொருளிலல்ல. படைப்பூக்க மனநிலையையே. ஒரு படைப்பாளியின் மனதினுள் படைப்புக்கான அநுபவங்கள் பல இருக்கலாம். அவை எழுதப்படும் போது மிகச் சிறந்த படைப்புக்கான தருணங்களையும் இழந்துவிடலாம். வலிந்து புனையப்படும் பல படைப்புக்களின் தோல்விக்கு உந்துதலில்லாத மனநிலையும் ஒருவகைக் காரணிதான். தினமும் இணைய தளங்களில் காணக்கிடைக்கும் பல கவிதைகளும் பிற படைப்புக்களும் இந்த வகையிலேயே இருக்கின்றன. வலிந்து சொற்களால் கட்டப்படும் பல கவிதைகள் வாசக மனத்திற்கு சோர்வையளிக்கின்றன.
2000 ஆம் ஆண்டின் பின் கவிஞர்களாக அறியப்பட்டவர்களில் தீபச்செல்வனும் முக்கியமானவர். யுத்தகாலக் கொடூரத்தின் வலிகளால் நெய்யப்பட்ட கவிதைகள் அவருடையவை. கடந்த காலத் துயரின் பிரதி விம்பங்களாயிருக்கும் தீபச்செல்வனின் கவிதைகள் வாசக மனதின் உள்ளடுக்குகளுக்குள்; மாபெரும் மனிதத் துயராய்க் கவிகின்றன.
துரத்திக்கொண்டிருக்கும் யுத்தத்தின் கோர முகத்தையும் அதனால் ஏற்பட்ட வேதனைகளையும் இயல்பான மொழியில் தீபச்செல்வன் எழுதுகின்றார். சிதிலங்களிலிருந்து மீளவும் கட்டியெழுப்ப முடியாத உள்மனக் குமுறலாய் அவரின் கவிதைகளிருக்கின்றன. தீபச்செல்வனின் கவிதைகளின் இரண்டாவது தொகுப்பான ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. ஏற்கனவே காலச்சுவடு வெளியீடாகப் ‘பாதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்னும் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.
பொதுவாக ஈழக் கவிதைகளின் திருப்புமுனைக்காலமாக எண்பதுகளைச் சொல்லலாம். அரசியல் ரீதியான மாறுதல்களும் பேரினவாதச் சிந்தனைகளும் தமிழ்த் தேசிய உணர்வூட்டமும் இக்காலத்திலேயே தீவிரம் பெற்றன. 83 இல் ஏற்பட்ட இனக்கலவரம் ஏற்படுத்திய மோசமான பாதிப்புக்கள் தமிழர்களின் மனங்களிலில் இன்னும் விலக்கமுடியாத வடுக்களாகவே இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தின் கவிதைகள் சமகாலத்தின் வன்முறை வடுக்களின் நேரடியான பிரதிபலிப்புக்களாகவிருந்தன. காட்சி விபரிப்புக்களாகவும் விபரணத் தன்மை கொண்டவையாகவும் பெரும்பாலான கவிதைகள் எழுதப்பட்டன. இயல்பு குலையாத யதார்த்தச் சித்திரிப்பு அநேக கவிதைகளிலும் காணப்பட்டன. எண்பதுகளில் நிகழ்ந்த வன்முறைகளின் சாட்சியங்களாகவும் ஆவண இலக்கியங்களாகவும் இக்கால கட்டக் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன.
தொண்ணூறுகளின் பின் எழுதப்பட்ட கவிதைகளிலேயே பூடகமான மொழி ஈழக்கவிதைகளில் முக்கியம் பெறுகின்றது. யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புக்களால்; நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும் அரசியற் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் வெளிப்படுத்த பூடகமான மொழி கவிஞனுக்கு தேவையானது. ஏனெனில் யுத்தத்திலீடுபடுபவர்களின் ஜனநாயக மறுப்புக் கொள்கை உயிர் அச்சுறுத்தலாக எப்போதுமிருந்துகொண்டேயிருந்தது. இதனால் கவிதைகள் ஒருவித இருண்மைத்தன்மையை நோக்கிச் சென்றன. உணர்வுபூர்வமான மொழிக்கு அப்பால் அறிவின் கூறுகளையும் கவிதை தனக்கானதாகக் கொள்ளத் தொடங்கியது. இத்தொடர்ச்சி இன்று வரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தீபச்செல்வனின் கவிதைகள் எண்பதுகளின் சாயல்களுடனும் அதேவேளை தொண்ணூறுகளின் கவிதைப் போக்கையும் உள்வாங்கியிருக்கின்றன. காட்சி விபரிப்புக்களாகவும் கதை கூறலாகவும் சம்பவச் சித்திரிப்புக்களாகவும் விபரண மொழிதலாகவும் தீபச்செல்வனின் கவிதைகளிருக்கின்றன. யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தின் அநேக நிகழ்வுகளை அவரின் கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஒரு கவிஞனுக்கான தார்மீகக் கடமையும் ஒரு வரலாற்றுப் பதிவாளனுக்கான பொறுப்பையும் அவர் தன்னுடையதாகக் கொள்ளுகின்றார். இதனாலத்தான் சொற்களின் நீட்சி மிகைத்ததாய் கவிதைகளிருக்கின்றன. புற நிகழ்வுகளின் தாக்கங்களால் விளையும் மனச்சஞ்சலங்களி;ன் தார்மீக உணர்வுநிலை அவரை எழுதத் தூண்டுகின்றது. கவிதையின் வடிவம், நேர்த்தி சார்ந்து காட்டும் அக்கறையிலும் பார்க்க உணர்வின் வலிமையிலேயே அதிகமும் பிரக்ஞை கொள்ளுகின்றார்.
தீபச்செல்வன், தன்னை யுத்தத்தின் குழந்தையாகக் காணுகின்றார். யுத்தகாலத்தில் பிறந்த குழந்தை எதிர்கொள்ளும் துயரங்களும் நிச்சயமின்மைகளும் இழப்புக்களும் அவரையும் வதைக்கின்றன. பதுங்குகுழியின்; வெம்மையில் கருகும் அவரது மனம், விடுதலையை அவாவி நிற்கின்றது.
‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ என்னும் தீபச்செல்வனின் இரண்டாவது தொகுதிக் கவிதைகள், யுத்தத்தின் முகங்களையும் அது தருகின்ற நீக்க முடியாத துயரங்களையும் பேசுகின்றன. முழுமையும் யுத்தத்தால் சிதறடிக்கப்பட்ட மனநிலையின்பால் இயங்கும் இக் கவிதைகளின் மையத்தில் நிராதரவாக்கப்பட் கவிமனம் தொங்கிக் கொண்டிருக்கின்றது. மீளமீள கவியும் யுத்தத்தின் மீது வெறுப்பும் அதே நேரம் அதைவிட்டு விலகமுடியாமலிருப்பதன் வலியும் வெளிப்படுகின்றன. யுத்தம், ஒரு பூதாகாரப்பண்டமாக எல்லோர் கைகளிலும் திணிக்கப்பட்டிருப்பதை தீபச்செல்வன் எழுதுகின்றார். அவகாசங்கள் எதுவும் இல்லாமல் போர் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தின் கவிதைகளாக இத் தொகுப்பின் கவிதைகளுள்ளன.

“மூன்றாவது போர் முடிந்த பொழுது
எழுப்பப்பட்ட மாளிகைகளில்
மீண்டும் தகர்ப்பதற்கான
நாலாவது போர் ஒளிந்திருந்தது”

என ‘அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள்’ என்னும் கவிதையில் எழுதுகின்றார். போர் என்பதை வெறும் புறக்காட்சி அனுபவமாகக் கொள்ளாது அகத்திலும் அது படிய வைத்திருக்கும் காட்சிகள் எவ்வளவு கொடுமையானவை என்பது பரிந்து கொள்ளத்தக்கதே. போர்க்காலம் என்பது எந்த நம்பிக்கைகளையும் தந்துவிடாத சூழலில் யுத்தத்தின் பொய்யான நியாயப்படுத்தல்களும் உலர்ந்துபோய்விடுகின்றன.

இரவுகளும் பகல்களும் யுத்தத்தின் வெம்மையில் கருகி மணக்கின்ற போது கவிஞனின் குரலில் அவநம்பிக்கைகளும் துயரமும் இயல்பாகவே படிந்துபோய்விடுகின்றது. இரவுகளை கொண்டாடும் மனநிலை அறுந்துபோய் அச்சத்தை கொண்டுவரும் வாயில்களாக இரவுகள் மாறிவிடுகின்றன. ‘பெருங்கிடங்குகளில் புதைபடுகிற கால்கள்’ என்னும் கவிதையில்

“செய்திகள் சனங்களைத் தன்னுகிற இரவில்
ஒலிபடாத குரல் பாம்புப் பெட்டியில் அடைபடுகிறது”

என எழுதுகின்றார். சாவுச்செய்திகளால் அந்த இரவுகள் நிறைந்திருக்கின்றன. பிள்ளைகளை போருக்குக் கொடுத்த தாய்மாரின் மனங்களில் வெறும் பிரார்த்தனைகள் நிரம்பிவழிகின்றன. பிள்ளைகளைக் குரல்கள் எட்டாத போதும் அவர்களின் துயர அழுகை தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. இன்னொரு கவிதையில்

‘எல்லாவற்றையும் இழந்து
ஓடிவருகிற இரவு
மிருகத்தின் வாயில் சிக்குண்டுவிடுகிறது.’

என்கின்றார். இங்கு ஆறுதல் தரும் இரவே பறிபோய்விடுகின்ற துயரத்தை எழுதுகின்றார். தினமும் யுத்தத்தின் அதிர்வுகளால் சிதறடிக்கப்படும் மனத்தினை எதனால்த்தான் ஆறுதல்ப்படுத்த முடியும்? ‘இரவு மரம்’ என்னும் கவிதையும் விமானங்களால் சிதறடிக்கப்படுகின்ற இரவு பற்றிய கவிதையாகும்.

அச்சுறுத்தல்களால் நிரம்பிய நாட்களை தன் கவிதைகளில் தீபச்செல்வன் எழுதுகின்றார். காரணங்கள் தெரியாமலே மனிதர்கள் கொல்லப்படுவது சாதாரணமாகிவிட்ட நாட்களில் மரணம் ஒரு பிசாசாகி ஊரெங்கும் நகரமெங்கும் அலைந்து திரிவதையும் அதனால் ஏற்படும் அச்சவுணர்வினையும் ‘வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்’ என்ற கவிதையில்,

‘தூக்கம் குழம்பிய காலையில்
துப்பாக்கியால்
எழுதப்பட்ட சுவரொட்டி
அறையின் கதவினை
தட்டிக்கொண்டிருந்தது’ எனவும்

‘பேய்கள் ஓட்டுகிற
மோட்டார் சைக்கிள் என்னைப்
பின்தொடருகிற
மாலைக்கும் இரவுக்கும்
இடையில்
நான் மறுநாட் காலையை இழந்தேன்’

எனவும் எழுதுகின்றார். சாவுகளாலும் எச்சரிக்கைகளாலும் அச்சுறுத்தப்படுகின்ற பொழுதுகளில் எல்லாமே மரணத்தை நினைவுறுத்துகின்றன. மரணம் பற்றிய பீதி எல்லாவற்றறையும் இழந்தவிடச் செய்கின்றது. எங்கும் மரணமே பேருருக்கொண்டுவிடுகிறது.

தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு மையத்தை சுற்றி எழுதப்படுகின்ற வௌ;வேறான கவிதைகள்தான். எல்லாக் கவிதைகளின் மையமும் இழப்பினையே பெரும் பொருளாகக் கொண்டிருக்கின்றன. நிலங்கள் ஆக்கிரமிக்கப் படும்போதும் நண்பர்களை உறவினர்களை உடமைமைகளைப் பறிகொடுக்கும் போதும் அவரின் மனம் இழப்பின் எல்லையில் நின்று கதறுகின்றது.

இத் தொகுப்பின் பெரும்பான்மையான கவிதைகளும் சம்பவங்களை விபரிப்பனவாகக் காணப்படுகின்றன. கவிதைகளுக்கு இடப்பட்டிருக்கும் அடிக்குறிப்புக்களும் திகதிகளும் இதனைச் சுட்டுகின்றன. யுத்தத்தில் இடங்கள் பறிபோவதையும் தன் தாயும் சகோதரியும் இடம் பெயர்வதையும் எனப் பலவற்றை கவிதைகளின் அடிக்குறிப்பக்களாக் காணக்கடக்கின்றன. இது வரலாற்றுப் பதிவுக்கான அடிப்டையாக இருந்தாலும் . கவிதை வாசிப்பில் ஒற்றைப்படையான புரிதலையே நிகழ்த்தும் சாத்தியங்களை ஏற்படுத்துகின்றது. தீபச்செல்வன் கூறக் கருதியிருக்கும் விடயங்களுக்கு அப்பால் வாசகனின் மனம் பயணிப்பதற்கான எந்த விதமான வாசல்களையும் கவிதைகள் கொண்டிருக்கவில்லை என்பது வாசகனுக்கு இடராகவே அமையும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ‘யாருமற்ற தெருவினை மிதிக்கிற கொடு நிழல்,பெருங்கிடங்குகளில் புதைபடுகிற கால்கள்,நெருப்புத் தின்றுவிட்டிருக்கிற சாம்பல்,ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்,நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு’எனப்பல கவிதைகளும் அடிக்குறிப்பிடப்பட்ட கவிதைகளாகவேயுள்ளன. சம்பவங்களை மையப்படுத்தி கவிதைகள் எழுதும் முறை காணப்படுகின்றதுதான். ஈழத்திலும் அவ்வாற பல கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஒரு தொகுப்பில் அடிக்குறிப்புக்களோடு அநேக கவிதைகள் காணப்படுகின்றமை கவிதைப்புரிதல் மீது நெருடலை ஏற்படுத்துகின்றது. முன்னுரையில் சுகுமாரன் குறிப்பிடுவதைப்போல தீபச்செல்வனின் கவிதைகள் இருண்ட நாட்களின் நாட்குறிப்புக்களாகவுள்ளன எனச்சொல்லலாம்.

பொதுவாக, படைப்புக்கள் என்பவை மொழியினால் கட்டமைக்கப்படும் ஆக்கச்செயற்பாடுதான். எனினும் தேவையற்ற சொல்லாடல்களும் பொருத்தமற்ற அவற்றின் அமைவிடங்களும் நல்ல பொருளாழமிக்க கவிதைகளையே நீர்த்துப்போகச் செய்யும் சாத்தியங்கள் இருக்கினறன. தீபச்செல்வன் கவிதைகளிலும் இத்தகைய நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பல கவிதைகள் நீண்ட கவிதைகளாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையும் உணர்வுகளால் கொட்டப்பட்டிருக்கின்ற இந்தக் கவிதைகள் வாசகனோடான நேரடியான அனுபவப்பிணைப்னை ஏற்படுத்துகின்றன. தன் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வடிகாலாகவே தீபச்செல்வன் கவிதைகளைக் கருதுகின்றார். இதனால்த்தான் கவிதை அறிவும் உணர்வும் கலந்துருவாகும் வடிவம் என்பதனைவிடவும் உணர்வனின் வடிவமாகவே கொள்ளுகின்றார். இதனால் கவிதை மொழியின் முக்கியத்துவம் பற்றியும் இறுக்கம் பற்றியும் அதிகளாவான முக்கியத்துவத்தைக் கொடுக்காதவராகக் காணப்படுகின்றார்.

‘தாகம் காய்கிற நதிக்கான கனவு’ என்ற கவிதையின் இறுதிவரிகளை இதற்கு உதாரணமாகச் சுட்டலாம்.

தண்ணீருக்கான வழிகள்
அடைபட்டடிருக்க
வாழ்வின் கனவின் நதி இனியொரு இரவில்
முற்றுகை அதிகரித்த காட்டினுள்
மீளப் பெயர்ந்து பாய்கிறது.’

இவ்வரிகளில் “இனி” என்ற சொல் எதிர்காலத்தை சுட்டிவருகிறது. ஆனால் கவிதை “பாய்கிறது” என நிகழ்காலத்தில் முடிகிறது. இவ்வாறமைவது சொற்களின் அர்த்தத்தைச் சிதைத்துவிடுவதாகவுள்ளது. “இனியொரு” என்ற சொல்லை நீக்கிவிட்டு கவிதையை வாசிப்பின் வாசிப்புக்கு எவ்வித இடையூறும் ஏற்றபடவில்லை. அல்லது அச்சொல் “இன்னொரு” என அமைந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

இதனைவிட ‘பயங்காவாதிகளும் பதுங்குகுழிகளும்’ என்ற கவிதையில்,

‘நமது ஓலங்களிற்குள்
பெருகும் குருதி ஆறுகளிற்குள்
சந்தைகள் பரவி நிகழ்ந்தன.”

எனவருகின்றது. இந்த வரிகள் பொருட் குழப்பம் தருகின்ற வரிகளாகவுள்ளன. “சந்தைகள் பரவி நிகழ்ந்தன” என அதன் முடிவு முன்னைய வரிகளுடன் எவ்விதத்திலும் ஒட்டாது விலகியே நிற்கின்றது. “நிகழ்ந்தன” என்னும் சொல் “நின்றன” என அமைந்திருப்பின் பொருட் புலப்பாட்டுக்கு ஓரளவாவது இடையூறாக அமைந்திருக்காது. இத்தகைய சிக்கல்கள் பல கவிதைகளில் காணப்படுவதால் சொற்களை நேர்த்திப்படுத்தி கவிதைகளைச் செம்மைப்படுத்த வேண்டிய தேவை அவருக்கிருக்கின்றது. அவ்வாறு இல்லாதுவிடின் வாசகனே சொற்களை ஒழுங்குபடுத்தி வாசிக்க வேண்டிய தேவையை கவிதைகள் ஏற்படுத்தும் நிலையேயிருக்கின்றது.

தீபச்செல்வன் கவிதைகள் பலவற்றில் கவித்துத்தன்மையில்லாத வரிகள் பலவற்றைக் காணமுடிகின்றது. சாதராணமாகப் புளக்கத்திலுள்ள சொற்களைக் கவிதைக்காக உடைத்துடைத்துப் போட்டு கவிதையென்னும் புனைவுருவை ஏற்படுத்துகின்றார். இதற்கு உதாரணமாக ‘கிளிநொச்சி’ என்னும் கவிதையினைக் குறிப்பிடலாம். யுத்தத்தால் எப்போதும் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நகரம் என்பதால் அந்த நகரத்துக்கு வரலாற்றடிப்படையிலான முக்கியத்துவங்கள் பல காணப்படுகின்றன. தீபச்செல்வனின் கவிதையும் அம்முக்கியத்துவத்திற்கான காரணங்களை கோவைப்படுத்துகின்றன. இவ்வடிப்படையில் இக்கவிதையின் பரிமாணம் முக்கியத்துவமானதுதான். எனினும் கவிதையாக அதனை எழுதும் போது கவித்துவத்தினை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததே. அவரின் நகரங்கள் சார்ந்த அனுபவப்பகிர்வுகள் மிக முக்கியமானவை. முதற்தொகுதியான ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பில் ‘யாழ் நகரம்’ என்னும் சிறந்த கவிதையினை எழுதியிருக்கின்றார். இக்கவிதை யுத்தத்தாலும் மரணங்களாலும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தின் நெருக்கடிமிக்க காலத்தை உணர்வோட்டத்துடன் பிரதிபலிக்கின்றது.யாழ்பாணம் பற்றிய அப்போதைய நிலையை,

‘ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி: யாழ். நகரம்’

எனச் செறிவடர்த்தி மிக்க வரிகளால் படிமப்படுத்துகின்றார். மனிதர்கள் இனங்காணப்படாதவர்களால் கொல்லப்படுவதும் சடலங்கள் இனங்காணப்படாமல் தெருக்களில் இருப்பதையும், கொல்லப்பட்டவனின் சடலம் மீது ஆயிரம் கதைகள் கட்டப்படுவதையும்,

‘எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?’

‘இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்க மாட்டீர்கள்
உங்களால் தொடர்ந்து
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்’ (பதுங்குகுழியில் பிறந்த குழந்தை)

எனப் பதிவுசெய்வதோடு மக்கள் உணவுப்பொருட்களுக்காக அல்லாடித்திரிந்த அந்த நாட்களின் அவலங்களையும் ஆயுதங்களால் குரலறுக்கப்பட்ட மக்களின் பெருந்துயரையும் மிக பிரக்ஞை பூர்வமாக எழுதியிருக்கின்றார். ஆனால் ‘கிளிநொச்சி’ நகரம் பற்றிய கவிதையில் உணர்வுபூர்வமான சொல்லாட்சி காணப்படவில்லை. மாறாக வெற்று வரிகளே பெரிதும் நிறைந்திருக்கின்றன,

‘இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார்சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்’

‘பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்ததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை’

இவ்வரிகள் கவிதைக்கான மொழியாகப் பரிமாணம் பெறாது வெற்றுச் சொற்களாகவே எஞ்சி நிற்கின்றன. வெறும் சம்பவங்களின் கோர்வையாகக் கவிதையாகிவிடுகின்றது.

இத்தெகுப்பில் பல நல்ல கவிதைகளாகவும் கவித்துச்செழுமையை கொண்டுள்ள கவிதைகளாகவும் சிலவற்றைக் குறிப்பிடலாம். ‘துண்டிக்கப்பட்ட சொற்கள்,வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்,அழிப்பதற்குப் பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள்,பாம்புகள் பரிசளித்த சவப்பெட்டிகள்,இரவு மரம், நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு,பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்’ இவ்வாறாகக் கொள்ளலாம்.

ஒரு காலகட்டத்தின் மாபெரும் மனிதத்துயரைப் பதிவு செய்திருக்கின்றன என்ற சிறப்பும் முக்கியத்துவமும் தீபச்செல்வனுக்கும் அவரது கவிதைகளுக்கும் உண்டு. ஆயினும் வெளிவந்திருக்கும் அவரின் இரண்டு கவிதைத்தொகுதிக் கவிதைகளும் வெளிப்பாட்டு முறையில் ஒத்தேயியங்குகின்றன. இத்தகைய முறையிலான கவிதை கூறல்முறையிலிருந்து மாறவேண்டிய தேவை அவருக்கிருக்கின்றது. அம்மாற்றம் தீபச்செல்வனின் கவிதைகளுக்கு மேலும் செழுமையையும் முக்கியத்துவத்தினையும் ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

நன்றி- காலம்

ஈழத்துப் பெண்களின் கவிதைப்புலத்தில் அனாரின் கவிதைகள்

Friday, October 2, 2009

“எனக்கு கவிதை முகம்” தொகுப்பை முன்வைத்து
…………………………………………………………………
நிலான் ஆகிருதியன்
ஈழத்துக் கவிதைகளின் பிரிநிலை அலகாக எண்பதுகளில் கிளைத்து விரிந்த பெண்களின் கவிதைகளுள்ளன. தீவிரமான பெண்ணிலைவாதச் சிந்தனைகளுடனும் பெண்மொழிப் பிரக்ஞையுடனும் கட்டமைக்கப்பபடும் பெண்களின் கவிதைகள் பொருளாலும் ஆழத்தாலும் தனித்த அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளன. ஆண்மையச் சமூகத்தில் விளிம்பு நிலைக் கூறாக இருக்கும் பெண், கால காலமும் சட்டமிட்ப்பட்ட வாழ்க்கை முறைகளையும், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட அனுபவக் கூறுகளையும் பால்நிலைக் கற்பிதங்களையுமே தன் அடையாளங்களாகக் கொண்டிருந்தாள். இந்த வட்டச் சுழற்ச்சியின் மையத்தைத் தகர்த்துக் கொண்டு பெண்களின் படைப்புக்கள் மேற்கிளம்பியிருக்கின்றன.
வன்முறைகள் உக்கிரம் பெற்ற எண்பதுகளில் பல பெண்கள் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களின் கவிதைகளில் வன்முறையின் ஆறாத காயங்கள் தீவிரமாக வெளிப்பட்டன. கைதுகள், காணாமல்போதல், வன்புணர்ச்சி, சித்திரவதை, விதவையாக்கப்படல் என நீளும் துயர்களின் வலிகளும் பெண்கள், ஆண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும் ஒடுக்கு முறைகளும் கவிதைகளின் பொருள்களாயின. நம்பிக்கையீனங்களும் நிச்சயமின்மைகளுமே பெரும்பான்மைக் கவிதைகளிலும் உள்ளோடிக் காணப்பட்டன.

ஊர்வசியின் இடையில் ஒரு நாள் என்ற கவிதை
‘..................................................
விடியலில்
கருக்கல் கலைகிற பொழுதில்
எனக்கு கிடைத்த
தற்காலிக அமைதியில்
நான் உறங்கும் போது,
ஒரு முரட்டுத்தனமான
கதவுத் தட்டலுக்குச் செவிகள்
விழிக்கும்

……………………………
பிறகு
கூந்தல் விழுந்து விழுகின்ற வரையில்
விசாரணை
என்னருகே அம்மாவும்
கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட
ஒரு அணில் குஞ்சைப்போல

நீ போய் விட்டாய்
நாள் தொடர்கிறது.’
என முடிகின்றது. இக்கவிதை எண்பதுகளின் நெருக்கடி மிக்க சூழலை சித்தரிக்கின்றது. புதல்வர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதும் அதன்பின் நிகழுகின்ற ஏனையவர்களின் இருப்பின் நிச்சயமின்மைகளையும் தாய்மையின் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் இயல்பாக வெளிப்படுத்துகின்றது.
சிவரமணியின் ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ என்ற கவிதை போர்க் காலங்களின் நெருக்கடியை இன்னொரு விதமாகக் காட்டுகின்றது.
“தும்பியின் இறக்கையைப்
பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும்
துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து
நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது

யுத்த கால இரவுகளின்
நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
‘வளர்ந்தவர் ஆயினர்’

சிவரமணி குழந்தைகளின் இயல்புகளினூடு யுத்தகாலத்தின் மோசமான தாக்கத்தை மொழிகின்றார். யுத்தம் குழந்தைகளின் இயல்புத்தனத்தைப் பறித்தெடுத்துவிட்டு அவர்களை வளர்ந்தவர்களாக்கும் முரணை எழுதுகின்றார்.
ஈழத்து பெண்களின் கவிதைகளின் மையமும் இயங்கு நிலையும் தொடரும் வன்முறைகளின் நீட்சியிலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. எண்பதுகளில் தொடங்கி இன்று வரையிலுமாக இப்போக்கு தொடர்கின்றது.
இனமுரண்பாடுகளால் விளைந்த கொடூர வன்முறைகள் ஒருபுறமிருக்க பெண், பால் சார்ந்து குடும்பத்திலும் புழங்கும் இடங்களிலும் எதிர்கொள்ளும் நெருக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் தீவிரம் பெறுகின்றன.
சங்கரியின் ‘அவர்கள் பார்வையில்’ என்ற கவிதை
‘எனக்கு
முகமில்லை
இதயமுமில்லை
ஆத்மாவுமில்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன’ என அமைகிறது. இக்கவிதை பெண் தனது பால் அடையாளம் சார்ந்து எதிர்கொள்ளும் வன்முறையை பதிவு செய்கின்றது. பெண்ணை போகப் பொருளாக ஆண்கள் பார்க்கும் நிலையை யதார்த்த பூர்வமாக சங்கரி காட்டுகின்றார்.

கல்யாணியின் ‘நான் உயர்ந்தவன்’ எனத் தொடங்கும் கவிதை, இந்த உலகம் ஆணுக்கே உரிதாக உள்ளதையும் ‘ஆண்’ என்ற அடையாளம் அவனைத் தவறுகளிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் விலக்கப்படுவதற்கு ஏதுவாக இருப்பதையும் மிகுந்த ஆதங்கத்துடன் எழுதுகின்றார்.
‘நீ யார்?
வெறும் பெண்
இந்த விறைப்பைத் தீர்க்கப்
படைக்கப்பட்டவள்
நான்
உயர்வானவன்
உன்னதமானவன்
போற்றப்பட வேண்டியவன்
நான் ஆண்

கட்டுப்பாடுகள் அற்றவன்
சந்தோசமானவன்
என் ஆண் குறி
விறைக்கக் கூடியது’ என கவிதை நிறைவுறுகின்றது. கல்யாணி, ஆண் சமூகத் தடைகள் இல்லாதவனாக இருப்பதையும், பெண் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதையும் தன்னை எதிர்ப்பால் நிலையில் உள்வாங்கிக் கொண்டு இக்கவிதையினை எழுதியுள்ளார். ஆண் எதிர்ப்பு நிலையின் தீவிரமான போக்கு இந்தக் கவிதையில் வெளிப்படுகின்றது.
தமிழகப்பெண் கவியான சுகீர்தராணியின் கவிதை ஒன்றை இவ்விடயத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமுடையதாக இருக்கும். அவரது ‘இரவு மிருகம்’ என்ற தொகுதியிலுள்ள ‘யோனிகளின் வீரியம்’ என்னும் கவிதை இவ்வாறு அமைகின்றது.
‘பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன் குறி மறைந்து போகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்’
இந்தக் கவிதையின் வரிகள் ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வீரியமிக்க கவிதையாக வெளிப்படுகின்றது. சுகிர்தராணி பெண்ணுடலை காதலினதும் தாபத்தினதும் நிலைகளனாக மட்டும் காட்டாது எதிர்ப்பின் ஆயுதமாகவும் காட்டுகின்றார். பெண்ணின் மேலெழுகையையும், அவளது இருப்புசார் வலிமையையும் உணர்த்துகின்றார்.
ஆண்மையச் சமூகத்தில், பெண் தன் உடல் சார்ந்து குரல் எழுப்புவது தமிழ்க் கவிதைக்கு புது வகையிலான பரிமாணத்தை கொடுக்கின்றது. முலை, யோனி, காமம், தாபம், சுயபுணர்ச்சி, மாதவிடாய் என பெண்கள் கூறுவதற்கே மறுக்கப்பட்ட பெண்களுக்குரியதான வார்த்தைகள் பெண்களின் கவிதைகளில் தீவிர உணர்வுகளுடன் வெளிப்படுகின்றன.
பெண் மொழி என்பது பெண்ணுடலை கொண்டாடுதலோ ஆணுக்கெதிராக குரலெழுப்புவதோ மட்டுமல்ல பெண்ணின் இருப்பில் அர்த்தத்தையும் அவளின் எல்லையற்ற வெளியையும் கோரி நிற்கும் மொழிப்பிரக்ஞை. இந்தப் பிரக்ஞையுடனேயே சமகால ஈழப் பெண்களின் கவிதைகளை அணுக வேண்டும்.
அனார் சமகாலத்தில் கவிதைகள் எழுதும் முக்கியமானவர். இவரின் கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. முதற் தொகுதியான ‘ஓவியம் வரையாத தூரிகை’ மூன்றாவது மனிதன் (2004) வெளியீடாகவும் இரண்டாவது தொகுதியான ‘எனக்கு கவிதைமுகம்’ காலச்சுவடு (2008) வெளியீடாகவும் வந்துள்ளன.
அனாரின் ‘எனக்கு சவிதை முகம்’ கவிதைத் தொகுதி அவரின் முதற் தொகுப்பிலிருந்து அவரை முதிர்ச்சி மிக்க கவிஞராகக் காட்டுகின்றது. மொழிக் கையாள்கையிலும் பொருட்செறிவிலும், உணர்த்துதலிலும் தனித்தன்மை பெற்றிருக்கின்றது. இத்தனித்துவமே இத்தொகுப்பு கவிதைகளின் மீதான ஈர்ப்புக்கு காரணமாகின்றது.
தொகுதியிலுள்ள முதற் கவிதையான “மண்புழுவின் இரவு” என்ற கவிதை
‘நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும்வரை’ என முடிகின்றது.

கவிதை பெண்ணின் உயிர்ப்பை அழகியல் சார்ந்த தருணங்களினூடாக கட்டுறுப்புச் செய்கின்றது. பெண்ணின் தவிப்பையும், அவாவையும் கூறுகின்றது எனினும் இக்கவிதையின் மேற்காட்டப்பட்டுள்ள இறுதி வரிகள், விடுதலையை அவாவி நிற்கும் பெண்மனப் பிரதிபலிப்பாக வெளிப்படுகின்றன. இரவை நீளமான நூலாகககாண்பதும்; பகலை நீளமான வெள்ளை நூலாகக் காண விளைவதும் புதுமுறை அனுபவத்தின் முகங்கள். பெண்ணை மண்புழுவாகக் காட்டுவது அனார் கையாளும் சமூக வாழ்வியல் சார் குறியீட்டு உத்திக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. மண்புழு விவசாயத்திற்கு உதவும் ஒரு உயிரியாகும். ஆயினும் அதனது அருவருப்பான தோற்றம் எல்லோராலும்; புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாகின்றது. இவ்வாறே சமூக முன்னேற்றத்திலும் அசைவியக்கத்திலும் பெண் பங்காளியாக இருக்கின்றாள். ஏனினும் ‘ஆண்மை’ என்ற சொல்லின் மாயப் புனைவுருவாக்கம் அவளை இரண்டாம் நிலையாக சிறுமைப்படுத்தும் போக்கை மிகவும் யதார்த்த பூர்வமாக அனார் வெளிப்படுத்துகின்றார்.
தொண்ணூறுகளின் பிற்கூற்றில் அனார் கவிதை எழுதத் தொடங்கியவர். அவரின் கவிதைகள் சிக்கலற்ற வெளிகளையும் புழங்கும் இடங்களையும் கோரி நிற்பவை, காதலை உன்னதமாகக் கொண்பாடுபவை, போரின் நெருக்கீடுகளையும் குறுக்கீடுகளையும் முகங்களாகக் காட்டுபவை. போர் என்பது அகத்திலும் புறத்திலும் நிகழும் போர். தீராத காதலும் தாபமும் கவிதைகளின் அடிச்சரடாக உள்ள போதும் அவற்றினடியாக மேற்கிளம்பும் எல்லையற்ற துயரமும் ஏக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பவை.
கனவின் இழைகளாலும் வர்ணங்களாலும் கட்டமைக்கப்பட்ட மொழி அனாருடையது. மெல்லிய கீற்றாகத் தெரியும் ஒளி அசைவையும் தன் வஸீகரமொழியின் சேர்க்கையால் வலுவூட்டுகின்றார். புறநிலை யதார்த்தத்தை மேவிய அகநிலைசார் அனுபவநெகிழ்ச்சியே அனாரின் அதிக கவிதைகளிலும் மேலோங்கியிருக்கிறது. அவரின் கவிதைகளின் புனைவு சார்ந்த வெளியின் உச்ச நிலை இயங்குதலானது கவிதையின் சாத்தியங்களை ஒவ்வொரு அலகுகளாகத் திறந்தபடியிருக்கினறன. காட்சிப்படிமங்களினூடாக மென்னுணர்வு சார்ந்த அனுபவங்களை விரித்துச்செல்கின்றன. இவ்வாறான முன்மொழிவுகளுடாகவே அனாரின் கவிதைகள் பற்றிய அனுபவவெளிக்குள் பிரவேசிக்க முடிகின்றது.
‘பிச்சி’ என்னும் கவிதை பாலுணர்வுப் பகிர்வு சார்ந்த கவிதையாகும். ஆணின் பாலியல் மேலாண்மையை உள்வாங்கிக்கொண்டு கவிதை விரிந்து செல்கிறது. இந்தக் கவிதையிலுள்ள
‘அறைக் கண்ணாடியில் பாம்பின் கோடுகள்
ஆதி மந்திரமாய் உறைகின்றன’

‘பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை
புலன்களை ஸ்பரிசிக்கின்றது’
போன்;ற வரிகளில் ஆதி மந்திரம் எது என்பதும் பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை எது என்பதும் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. ஆண்வழிச் சமூக அமைப்பில் ஆணே பெண்ணின் பாலுணர்வுகளையும் தீர்மானிப்பவனாகவும் இருக்கின்றான். ஆண் பெண்னை தன் மோகத்திற்கான பாத்திரமாக கையாளும் விதத்தை மேலுள்ள கவிதையின் வரிகள் புலப்படுத்துகின்றன. இது நீண்ட நெடுங்காலமாக பால்நிலை விதியாக தொடர்வதை ஆதிமந்திரம், பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை போன்ற சொற்களில் வெளிப்படுகின்றது. இன்னொரு விதத்தில் ஆதிமந்திரம், இசை போன்றவை பெண்னை வசியப்படுத்தும் ஆண் தந்திரத்தை குறியீடாக உணர்த்துகின்றன. இதனை உறுதிசெய்வது போலவே
‘கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென
பத்து விரல்கள்’ என்னும் வரி அமைகின்றது.

இவ்வரிகளைத் தொடர்ந்து வரும்

‘காற்றின் அதிர்வுகளில்
பளிச்சிடுகின்ற மயக்க இழைகள்
விரிகின்றன ஒவ்வொன்றாய்
குளிர்ந்து..................’. என்கிற வரிகளும் வசியப்படுத்தலுக்கான வினையாற்றுதலை முன் நிறுத்துகின்றன.
அனார், தன் கவிதைகளில் சொற்களை உரிய விதத்தில் அர்த்தப் பாங்குடன் பயன்படுத்துகின்றார். இயற்கை அவரின் கவிதைகளில் புதுப்புது வகையிலாக அர்த்தம் கொள்கின்றது பெரும்பான்மைக் கவிதைகளும் இவ்வாறமைபவையே. இயுற்கையின் மாற்றங்களை, பருவமாற்றங்களை புதிர்களை, புதுமைகளை வாழ்வியற் கூறாக படிமமாக்குகின்றார். இது அனார் கருதும் அர்த்தங்களிலிருந்தும் வாசகனுக்கு மேலும் அர்த்தங்களை கண்டடைவதற்கான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.
‘நேர்த்தியாக வளர்க்கப்பட்ட புற்தரையில்
குருவிகள்
நீர்த்துளிகளில் ஜொலிக்கும் சூரியனைக் கொறிக்கின்றன.’
(எட்டமுடியாத அண்மை)

‘பசுமையின் உச்சமாகி நான் நிற்கின்றேன்
வேர்களின் கீழ் வெள்ளம்
இலைகளின் மேல் ஈரம்
கனவு போல பெய்கின்ற உன்மழை’
(மின்னல்களைப் பரிசளிக்கும் மழை)

‘விடிந்தும் விடியாத
இக்காலைக் குளிரில்
முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்
கோள் மூட்டுகின்றது
பெயர் தெரியாத ஒரு காட்டுப் பூச்சி’
(எனக்கு கவிதை முகம்)

இவ்வாறு பல வரிகளில் இயற்கையைத் தன் கருத்தேற்றத்திற்கான கூறாக அனார் பயன்படுத்துகின்றார். வெறுமனே அழகியற் சொற்களாக இவ்வரிகள் இருக்காது பொருள் மிகுந்தவையாக முதன்மை பெறுகின்றன.
அனாரின் ‘அரசி’ என்ற கவிதையும் ‘நான் பெண்’ என்ற கவிதையும் பிற பல கவிதைகளிலிருந்தும் மாறுபடுபவை. இவை பெண்ணின் இருப்பின் அர்த்தத்தை நிறுவ விழைகின்றன. அரசி கவிதை “குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்’ என்ற கவிதையில் முன் நிறுத்தும் ‘அந்தப்புரத்தின் அரசி’க்கு நேர்மாறானவளாக காட்டப்படுகின்றாள். அந்தப் புரத்தின் அரசி, குரல் என்னும் திராட்சை ரசத்தினால் கட்டுண்டு போகிறவளாக இருக்க ‘அரசி’ கவிதையில் வரும் அரசி பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான பிரகடனங்களை முன்மொழிபவளாகவும் தனது, ‘பெண்’ என்னும் அடையாளத்தை ஓங்கியறைந்து வெளிப்படுத்துகிறவளாகவும் இருக்கின்றாள்.

‘உன் கனவுகளில்
நீ காண விரும்புகிறபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
அடி பணிய அல்ல
கட்டளையிடப் பிறந்தவள்’
(அரசி)

ஏனத் தன் குரலை உயர்த்தும் போது ஆண்கள், பெண்களைக் காண விரும்பும் ‘இல்லத்தரசி’ என்ற பதத்தை கேள்விக்குட்படுத்துகின்றாள்;. தன்னைப் பேரரசியாகப் பிரகடனம் செய்கின்றாள். இக் கவிதையின் இறுதி வரிகள்

‘கைகளிரண்டையும்
மேலுயர்த்திக் கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகிறபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி’

என முடிகின்றன. இவு;வரிகள் பெண்ணின் சமூக விடுதலைப் பிரகடனத்தை ஒலிக்கின்றன. ஆண்களால் பெண்களுக்கெனத் தீட்டி வைக்கப்பட்டிருக்கும் சட்டங்களை தகர்த்து ஒலிக்கும் குரல், தன்னைத் தீர்மானிக்கும் ஆதார சக்தியாக தன்னை வெளிப்படுத்துவது. சமூகத் தடைகள் மிக்க சமூகத்திலிருந்து வெளிப்படும் இக்குரல் ஆழ்ந்த கவனிப்பிற்குரியது. பர்தாக்களை விலத்தி நிமிரும் குரலாக வெளிப்படுகின்றது.
அரசி கவிதையின் இன்னொரு ஆக்கப் பிரதியாகவே’நான் பெண்’ என்னும் கவிதையுள்ளது. இது பெண்ணை இயற்கையின் பேருருவாக காண்கின்றது.
ஒரு கட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒருவிதை
ஒரு காடு
நிலம் நான்
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்’
(நான் பெண்)

இக்கவிதையில் இயற்கையின் அனைத்து வடிவமாகவும் அனார், பெண்ணைக் காண்கிறார். மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியா புதிர் நிரம்பிய இயற்கையாக பெண்ணை பரிமாணம் கொள்ள வைக்கின்றார். இப்பரிமாணம் பெண், உலகின் உள்முகச் சக்தியாக எப்போதும் விளங்கும் விதத்தை கொள்வதாக அமைகின்றது.
இத்தொகுப்பிலுள்ள ‘மேலும் சில இரத்தக் குறிப்புக்கள்’ என்ற கவிதை ஏனைய கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றது. பிற கவிதைகளிற் பலவும் ஆண், பெண் எதிர்பால் உறவு நிலையை மையப்படுத்தியேயுள்ளன. ஆனால், இக்கவிதை தாய்மையின் அடித்தளத்திலிருந்து வளர்ந்து கோபுரமாகின்றது. வன்முறைகளின் வடுக்களை மானிடப் பெருந்துயராகக் காட்டுகின்றது.

கவிதையின் ஆரம்பவரி பெண்ணின் உடலியல் இயற்கையாக இருக்கும் மாதவிடாய் பற்றிய இயல்போடு தொடங்குகின்றது. மாதந்தோறும் குருதி காண்கின்ற போதும் குழந்தையின் விரலில் குருதி காணும் போது ஏற்படும் அதிர்ச்சியையும் வலியையும் தாங்கமுடியாத தாய்மையின் உணர்வு நிலையிலிருந்து காட்டுகின்ற போதும், இந்த உணர்வு நிலை தன்குழந்தை என்னும் நிலை கடந்து வன்முறையாலும் போராலும் இறக்கும், வலியுறும் உயிர்களுக்கான கருணையின் கண்ணீராகப் பீறிடுகின்றது.
அனாரின் பிற கவிதைகளில் இல்லாத துயரத்தின் வலியும், இயலாமையின் கண்ணீரும் மனக்குலைவின் சிதறல்களாய்த் தெறிக்கின்றன.
‘வன்மத்தின் இரத்தவாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது’
என முடியும் ’மேலும் சில இரத்தக்குறிப்புக்கள்’ கவிதை தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தின் சாட்சியாக நிற்கின்றது. வன்கல்வி, சித்திரவதைகள் என்றாகிவிட்ட எமது காலத்தின் முகப் பிரதிபலிப்பாக இருக்கின்றது.
அனாரின் ‘எனக்கு கவிதை முகம்’ தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் காதலை முன் நிறுத்துபவை. ஆண், பெண் உறவின் ஆதார ஊற்றாகக் காதலும் காமமும், தாபமும் கலந்து உருப்பெறும் கவிதைகள் என இவற்றை வரையறை செய்யமுடியும். ஆயினும் அனார் இருவகையாக தன் உணர்வுகளை காதல் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்துகின்றார். முதலாவது கேள்விகளோடு ஆணையும் அவனது காதலையும் எதிர்கொள்வது. இரண்டாவது, தனணுணர்வு நிலையில் குழைந்து ஆணையும் அவனது காதலையும் கேள்விகளற்று ஏற்றுக்கொள்வது. இவ்விரு தன்மைகளுடனும் வெளிப்படும் இக்கவிதைகளில் பெண்ணின் துயரையும் அவளது மறுக்க முடியா மேன்மையையும் பதிவு செய்கின்றார்.
அனாரின் சில கவிதைகள் ஒத்த அனுபவத்தின் வேறுவிதமான சாயல்களோடுள்ளன. ஒரு கவிதையை படிக்கும் போது இன்னொரு கவிதை நினைவில் வந்து வாசிப்புக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது. தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் காதலைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளமை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஏடுத்துக் காட்டாக தணல்நதி, வரு(ந்)த்துதல் ஆகிய இரு கவிதைகளையும் காட்டலாம். ‘தணல் நதி’ என்ற கவிதையின்
‘ஓர் முத்தத்தைப் பற்ற வை
எரிந்து போகட்டும் என் உயர்க்காடு’ என்னும் வரிகளும்

‘குளித்து ஆறவிடு என்னை
குமுறட்டும் தனிமை
மங்கிப் போய்ச் சாகட்டும் பகல்’ என்னும் ‘வரு(ந்)த்துதல்’ கவிதையிலுள்ள வரிகளும் ஒத்த அனுபவத்தின் இருவேறான சொல்லடுக்கு முறையாகவேயுள்ளன.

தனிமையையும் ஆற்றாமையையும் எழுதிச் செல்லும் அனார், தன் அகநிலை அனுபவங்களின் திரட்சியாகவே தன் கவிதைகளைத் தருகின்றார். ஆவரின் கவிதைகளை ஒட்டு மொத்தமாகப் படிக்கும் போது வாசகனின் மனம் இன்னொரு மாற்றுப் பிரதியை கோரி நிற்கின்றது. இந்த மாற்றுப்பிரதி கவிதை சார்ந்த அனுபவமாக மட்டுமல்லாமல் வாசகனின் மனதில் எழும் கேள்விகளாகவும் உருக்கொள்கின்றது. கேள்விகளும் அதனோடு ஒட்டிய வாசிப்பு அனுபவமும் அனாரின் அக நிலைசார் அனுபவங்களுக்கு அப்பாலாக விரிந்து கிடக்கும் துயரங்களிலும் வலிகளிலும் தொங்கிக் கிடக்கின்றன.

மொத்தமாக முப்பத்து மூன்று கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை காதல் கவிதைகள் என பெருங்கூறாகவும், பெண்ணியப்பொருள்சார் கவிதைகளாகவும், வாழ்வியல்சார் இருப்பைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகள் எனவும் வகையீடு செய்ய முடியும். காதல் கவிதைகளிலும் பெண்ணியச் சிந்தனை உள்வாங்கப்பட்டுள்ள போதும், நான் பெண், அரசி, பெண்பலி போன்ற கவிதைகள் தனித்துவமானவை, நுண்ணாய்வுக்குட்படுத்த வேண்டிய இக்கவிதைகள் பெண்ணுடலின் மீதான ஆக்கிரமிப்பை கேள்விக்குட்படுத்துகின்றன. பெண்ணின் சுயாதீன இருப்;புக்காகக் குரல் எழுப்புகின்றன.
‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’, ‘எட்டமுடியாத அண்மை’, ‘வெயிலின் நிறம் தனிமை’, ‘கோமாளியின் கேலிப் பாத்திரம்’, ‘மாற்ற முடியாத வலி’, ‘வெறித்தபடி இருக்கும் கனவு’, ‘பருவ காலங்களைச் சூடித்திரியும் கடற்கன்னி’ போன்ற கவிதைகள் பாடுபொருளின் வேறுபாடுகள் காரணமாக தனித்துத் தெரியும் கவிதைகளாகும்.
‘எனக்கு கவிதைமுகம்’ தொகுதி அனாரின் கவிதா ஆளுமையை வெளிப்படுத்துன்கின்றது. சொற்தேர்விலும் படிமப்படுத்துதலிலும் அவருக்குள்ள தேர்ச்சியையும் நுண்ணுணர்வையும் அறியமுடிகின்றது. முன்னுரையில் சேரன் குறிப்பிடுவது போல’ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கின்றார் அனார்’, என்பது கவனிப்புக்குரிய கூற்றாகவேயுள்ளது.

இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்

Monday, August 24, 2009

சத்தியபாலான் கவிதைகள்
நிலான்
.........................................
வெளிப்பாட்டு முறையில் நவீனத்துவமிக்க இன்றைய கவிதைகள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்து ஓரளவு ஓய்ந்துள்ளன. கவிதையின் புரியாமை அல்லது இருண்மைத் தன்மை பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் வாசிப்பு முறை மரபுவழிப்பட்ட வாசிப்பு முறை என்றே சொல்ல வேண்டும். சொற்கள் தருகின்ற அனுபவவெளி விரிந்தது. வாசிப்பவனின் அனுபவமும் விரிந்ததாக இருக்கும் போதே கவிதையின் அல்லது படைப்பின் முழுமையினை எட்ட முடியும்.
தமிழிலுள்ள பழமொழிகளும் மரபுத்தொடர்களும் அவற்றின் நேரடியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுபவையல்ல. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற பழமொழி அடம்பன் கொடியயைப் பற்றியது மட்டுமல்ல. அது தரும் நேரடியான அர்த்ததிற்கு அப்பாலும் அதற்கான வாசிப்பு மாறுபட்டதாக அமைகின்றது. கவிதையில் சொற்கள் தாம் கொண்டிருக்கும் நியமமான கருத்திற்கப்பாலும் விரிந்த பொருளைத் தருகின்றன. வாசிப்பவனின் அனுபவத்தின் எல்லை விரியும் போது கவிதையைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களும் விலகுகின்றன.


ந. சத்தியபாலனின் கவிதைகள் நவீன வெளிப்பாட்டைக் கொண்டவை. அவரது "இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்" என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சத்தியபாலன் கவிஞர் மட்டுமல்ல சிறுகதைகள், கட்டுரைகள், பத்திகள், மொழிபெயர்ப்புக்கள் என பலதிற ஆளுமை கொண்ட படைப்பாளி. வலுமிக்க சொல்லாட்சியினாலும் சொல்லல் முறையினாலும் தன் கவிதைகளுக்கான வாசிப்பை வாசகனுக்குள் பல்பரிமாணம் கொள்ள வைக்கின்றார். அவருடைய பூடகமான மொழி நிகழ்காலத்தின் வலியைப் பேசுகின்றது. பல கவிதைகள் மென்னுணர்வின் முகங்களைக் கொண்டுள்ள போதும் அவற்றின் உள்ளார்ந்த இயங்கு நிலையும் அவை கொண்டுள்ள அரசியலும் தீவிரமானவை.


காலம் பற்றிய பிரக்ஞை பூர்வமான கருத்தியல் சத்தியபாலனிடம் சரியான அர்த்தத்தில் இருக்கின்றது. புரிதலும் அதனோடு இயைந்த எல்லாவற்றையும் தன்னால் இயன்ற முழுமையிலிருந்து கொண்டு வருகின்றார். முகம் புதைத்து முதுகு குலுங்க குமுறும் அழுகையின் குரலாய் அவரது குரல் துரத்திக் கொண்டிருக்கிறது. சாமானிய மனம் நுழைய மறுக்கும் அல்லது நுழைய விரும்பாத இடங்களிலிருந்தும் கவிதைகளைத் தருகின்றார்
தன்னுலகின் மாயமுடுக்குகளுக்குள்ளும் வெளிகளுக்குள்ளும் காற்றைப்போல அலையும் சத்தியபாலன் மிதமிஞ்சிய வலிகளுடன் திரும்புகின்றார். போலிகளை நிஜமென நம்பி ஏமாறுகையில், உறவு பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உடைந்து சிதறுகையில் நிர்க்கதியாகும் மனநிலைக்கு சடுதியாக வந்துவிடுகின்றார். சக மனித உரையாடல்கள், புறக்கணிப்புக்கள்,மீளவியலாத போரும் அது தந்த வலிகளும், இழப்புக்களும், அலைச்சல்களும், எதையும் கவிதையாகக் காணும் மனமும் எனப் பலவித புனைவு விம்பங்களின் பதிவாக சத்தியபாலனின் கவிதைகளுள்ளன.


சத்தியபாலனின் கவிதைகளில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியும் சொல்லல் முறையும் புதிய வகையிலானவை. மெல்லிய மன அசைவியக்கத்தின் மாறுதலான தருணங்களைக் ஏற்படுத்துபவை.அவர் சம காலத்தின் துயர்மிகுந்த பயணியாக இருக்கின்றார். முக்கியமாக அலைகின்றார். சத்தியபாலனின் மொழி அலைதலின் மொழியாகின்றது. அவர் அலையும் மனத்தின் கவிஞராக இருக்கின்றார். எப்போதும் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகளின் வெப்பத்தில் அவரின் மனம் உருகுகின்றது. சமகால வாழ்வும் அதையொட்டிய துயருமே மனத்தின் உருகுதலுக்குக் காரணம். முற்றிலும் போரின் அனர்த்தங்களும் விலக்கவியலா இருளாய்ப் படிந்துள்ள அவலங்களும் அநேக கவிதைகளின் மையங்களாகின்றன. "காவல், கூத்து, இன்னுமொரு நாள், இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த காலைப் பொழுது பற்றி" போன்ற கவிதைகள் காலத்தின் பிரதிபலிப்புக்களாகவுள்ளன. இந்தக் கவிதைகளின் இறுதி வரிகளில்த் தொனிக்கும் துயரம் நிழலாக தொடர்ந்து கொண்டிருப்பவை.


"வந்த காரியத்தை
துரிதமாய் முடித்து
புhதை மாற்றி வீடு வந்து சேர்கின்றேன்
வீட்டையொரு காவலென நம்பி" (காவல்)


"குளித்துப் புத்தாடை அணிந்து
போய்க் கொண்டிருந்தோரின்
கவனத்துக்கு தப்பிய கால் விரல்
இறைகளுக்குள்
ஊலர்ந்து போயிருந்தது
இரத்தம்" (கூத்து)


"மறுநாட் காலையிலும்
கோழி கூவிற்று
புறவைகள் இசைத்தன
நாள் நடந்தது
மதியம் மாலை என பொழுது முதிர்ந்து
மீண்டும் இருளாயிற்று" (இன்னுமொரு நாள்)


"இன்னுமொரு நாள்" என்னும் தலைப்பிலான கவிதையின் இறுதி வரிகள் அஸ்வகோஸின் "வனத்தின் அழைப்பு" தொகுப்பிலுள்ள ‘‘இருள்" என்னும் கவிதையின் வரிகளை ஞாபகமூட்டுகின்றது. அஸ்வகோஸ் இயல்பு குலைந்த காலத்தை


"கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன" என எழுதுகின்றார்.


இருவருமே இரத்தமும் நிணமும் மணக்கும் காலத்தின் கவிஞர்கள். இருவர் கவிதைகளிலும் காலம் கொள்ளும் படிமம் ஒத்த தன்மையானதே. எனினும் கவிதை மொழியின் தனித்துவமும் கவிதையில் இவ் வரிகள் பெறும் பொருள் சார்ந்த, இடம் சார்ந்த முக்கியத்துவங்களும் வாசக மனதுக்கு மாறுபாடான அனுபவத்தைத் தருகின்றன.


சத்தியபாலனின் கவிதைகளில் அநேக சந்தர்ப்பங்களில் அழகியலின் தருணங்களைத் தரிசிக்க முடிகின்றது. அவர் காட்டும் அழகியல் சொற்களின் மேல் வலிந்து பூசப்படும் சாயங்களல்ல. கவிதைக்கான இயல்பை மேலும் வலிமையாக்கும் முறைமை கொண்டது. ஆழகிய மனத்தின் ஒருமை குலையாத படிமப் பாங்கான தன்மை கொண்டவை. இவ்வகைக் கவிதைளில் "காடு, தன்னுலகு" போன்றவை முக்கியமானவை.


"பரிதி புகாத
தடிப்பினை ஊடறுத்து
அங்கங்குள்ள
இடைவெளியூடாய்
நுழையும் ஓளி விரல்கள்
பொட்டிடும் நிலத்துக்கு" (காடு)


காட்டில் இயல்பாய்ப் படிந்துள்ள இருளை "பரிதி புகாத தடிப்பு" எனக் காட்டும் விதமும் ஒளியை விரல்களாகவும் ஒளி, நிலத்தில் இலைகளினூடு விழுந்து ஒளிரும் அழகை ஒளிவிரல்கள் நிலத்துக்கிட்ட பொட்டாகவும் காட்டப்படுவது மகிழ்வளிப்பன. "தன்னுலகு" கவிதையும் அழகியல் சார்ந்த தருணமாய் விரிந்தாலும் பொருளாழமும் படிமச் செறிவும் கொண்டது.


"தொட்டி விளிம்பு வரை நிரம்பி
ததும்புகிறது நீர்
சிறிதாயெனிலும் ஓர் அழுத்தம்
நேர்கையில்
வெளியேறி ரகசியமாய்
சுவர் தழுவி வழிகிறது
………………………………
……………………………
வெய்யிற் பொழுதில் சூடாகியும்
நிலவொளி வருடலிற் குளிருற்றும்
வாழ்வொன்றியற்றிட முயல்கிறது
வெய்யிலோடு நாள் தோறும்
தான் ஆவியாவதுணராமல்"


மேற்பார்வைக்கு தொட்டி நீர் வெப்பத்தில் ஆவியாவதைக் காட்டுவது போலிருந்தாலும், பிறரின் உன்னதத்திற்காய் தன்னையறியாமலேயே தன்னை இழந்து கொண்டிருக்கும் மனித மனத்தின் மேன்மையைக் கவிதையுணர்த்துகின்றது.


சத்தியபாலன் வாழ்க்கையை அகவெளியின் பரப்பில் காண்கின்றார். தான் கைவிடப் படும் போதும் புறக்கணக்கப்படும் போதும் ஆதரவாகத் தோள் அணைக்கப்படும் போதும் தன்னுள் நிகழும் மாற்றங்களை கவிதைகளாக்குகின்றார்.


"திடீரென ஒரு நாள் இனிப்புப் பூச்சுக்கள்
கரைந்து போயின
உள்ளீடு நாவைத் தொட்டு தன் மெய்ச்சுவை
சொல்லிற்று
எழுந்த குமட்டலில் …எதிரே
நிஜத்தின் குரூர முகம்
பழைய பசுங்கனவு சோப்பு நுரைக்
குமிழியாய்
காற்றில் மெல்ல மிதந்து போயிற்று" (தரிசனம்)


கனவுகளால் சூழப்பட்டிருக்கும் வாழ்வில், உறவுகளின் ஆதரவும் தேவைகளும் சாமானிய வாழ்க்கையை வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்குமானவைதான். எனினும் உறவுகளின் புனித விம்பம் உடைபடும் போது ஏற்படும் வலியும் ஏமாற்றமும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிடுபவை. சத்தியபாலன் இதைப் பல கவிதைகளிலும் எழுதுகின்றார்.
நம்பிக்கைகளைச் சில தடவைகள் தந்துவிடுகிற சத்தியபாலன் பல தடவைகளும் நம்பிக்கையீனங்களால் அல்லாடுகின்றார். நம்பிக்கை தரக்கூடியதல்ல சமகாலம். எல்லா நம்பிக்கைகளும் உடைந்து சிதறிய பின்னர். ஏதைத்தான் பேசுவது? ஆற்றாமைகளை அதிகமும் பேச வேண்டியிருக்கிறது. அரசியலின் குரூரம் எல்லாவற்றின் மீதும் சர்வமாய்ப் படிந்திருக்கிறது. சக மனிதனின் துயரத்துக்காக குரல் எழுப்ப முடியாத நிலத்தில் வாழும் கவிஞனின் குரலும் விம்மலும் விசும்பலுமாகத்தான்; வெளிப்படுகின்றது. தன்கே உரியதான மொழியில் சத்தியபாலன் அரசியலைப் பேசுகின்றார்.


"சென்ற திசையிலேயே
திகைத்தலைந்தன சில….
வில்லங்கமாய்ப் பிடித்து
அமர்தப்பட்டன சில
தவறான இடத்தில்
அவமதிக்கப்பட்டு
முகஞ் சிவந்து திரும்பின சில
உரிய திசையின்
இடமோ
வெறுமையாய் எஞ்ச
எனது சொற்களின் கதி
இப்படியாயிற்று
நூற்றியோராவது தடவையும்" (அர்த்தம்)


இந்தக் கவிதை சமகாலத்தின் வலி நிரம்பிய அரசியலை உரி முறையில் பதிவு செய்திருக்கின்றது. குரல் மறுக்கப்பட்ட இனத்தின் அரசியல் இயலாமையின் வலியையும்இ துயரையும் வெளிப்படுத்துகின்றது.
சத்தியபாலனின் கவிதை வெளிப்பாட்டு முறையில் மாற்றமுடையதாய் "நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும்" என்னும் கவிதையிருக்கின்றது. புதியதான புரிதலை இக்கவிதை நிகழ்த்துகின்றது. கவிதையில் வரும் உறைந்த மனிதன் எமது காலத்தின் குறியீடாக பரிமாணம் கொள்வதோடு துயர்களால் சித்தம் சிதறுண்டு போகும் மனிதர்களின் குறியீடாகவும் காட்டப்படுகின்றான்.


"சந்தியில் நிற்கிறான் உறைந்த மனிதன்
கல்லில் சமைந்த
முகத்தின் சலனங்கள்
வாசிப்போரற்று
வெறித்தே கிடக்கும்
வாழ்திருந்த காலத்தே
அழுந்த எழுதப்பட்ட
அவனது இருப்பு
இன்று வெறும் நினைவின் சுவடுகளாய்";


எவராலும் கண்டு கொள்ளப்படாது. அகதி முகாங்களுக்குள்ளும் வதை முகாங்களுக்குள்ளும் அடைபட்டவர்களாய் சராசரி வாழ்வு மறுக்கப்பட்டவர்களாய் வாழும் எண்ணற்ற மனிதர்களின் துயத்தின் மொத்த உருவாக உறைந்த மனிதனை கவிதையில் காணமுடிகின்றது.
பலமான மொழிப் பிரயோகம் மிக்க கவிதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் சில கவிதைகள் அதீத சொற் சேர்க்கையுடன் கூடிய கவிதைகளாக இருக்கின்றன. தானே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என சத்தியபாலன் நினைக்கின்றார். இது வாகனுக்கு ஏற்படும் வாசிப்பு உந்தலுக்கு தடையாக அமையக்கூடிய சாத்தியங்களை ஏற்படுத்துகின்றன. இதனையே பின்னுரையில் பா.அகிலன் "பல இடங்களில் மௌனத்தின் பாதாளங்களைச் சொற்களிட்டு சத்தியபாலன் நிரப்பி விடுகிறார்" என்கின்றார்.
"கண்ணே உறங்கு" என்ற கவிதை நேரடித்தன்மை கொண்டதோடு. கருத்துக் கூறலாகவும் உபதேசிப்பின் குரலாகவும் இருக்கின்றது.


"புன்னகையின் நேசம் மெய்
உபசரிப்பின் பரிவு மெய்
பற்றிக் கொள்ளும் கையின் இறுக்கம்
உதவ முன் வரும் மனசின் தாராளம்
தலை சாய்க்கும் மடியின் இதம்
எல்லாம் உண்மை
நம்பு நம்பு"


இவ் வரிகள் பழகிப்போன எழுத்து முறையின் தொடர்ச்சியாக அமைகின்றதே தவிர புதியதான வாசிப்பு அனுபவத்தை தருவதாக அமையவில்லை. சில கவிதைகளில் சொற்களை தனித்தனியாக ஒரு வரிக்கு ஒரு சொல்லாக உடைத்துடைத்துப் போடுகின்றார். சொற்களுக்கிடையிலான வெளி கூடும் போது வாசிப்பு மனநிலையும் குலைந்துபோகிறது. சில வேளைகளில் சலிப்புணர்வும் ஏற்படுகின்றது. "காணல்" என்ற கவிதை முழுமையும் இவ்வகையில் அமைந்துள்ளது.


சத்தியபாலனின் "இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்" என்ற இக் கவிதைத் தொகுதி வெளிப்பாட்டு முறையிலும் பொருளாழத்திலும் கணிப்பிற்குரியதாக இருப்பதுடன். சமகாலத்தின் மீதான மீள் வாசிப்பாகவும் இருக்கின்றது.

புதிய உணர்முறையிலான சித்தாந்தன் கவிதைகள்

Tuesday, September 23, 2008

கருணாகரன்
( காலத்தின் புன்னகை முன்னுரையில்)

மொழியின் ஆகக்கூடிய சாத்தியப்பாடுகளைக் கொண்டியங்கும் கவிதை,மொழியினூடாக உணர்தலையும் உணர்தலை மொழியினுர்டாகவும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. கவிதை உணணர்வாகவும் அனுபவமாகவும் உணர்வினதும் அனுபவத்தினதும் கூட்டுத்திரட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கே சித்ததந்தன் கவிதைகளிலும் இதுவே நிகழ்கின்றது. சித்தாந்தன் கவிதைகள் புதிய உணர்முறையிலானவை.

சித்தாந்தன் புதிய கவிஞர்.புதிய உணர்முறையுடையவர். மாறுதலான கவிதை குறித்துச் சிந்திப்பவர். அiதியும் அந்த அமைதிக்குள் உள்ளியக்கமும் கொண்டவா. மொழியை சித்தாந்தன் பயன்படுத்தும் முறையினூடாக இவரின் கவிதைகள் புதிய வெளிப்பாட்டையும் புதியதான உணர்முறையினையும் வெளிக்காட்டுகின்றன. உணர்வின் சாரத்தோடு இணையும் மொழியினை இவர் அதிக சாத்தியப்பாட்டுடன் கைளாளுகின்றார். இந்த தொகுதியின் முதல் கவிதையான அலைகளின் மொழி கடலை இவர் உணரும் விதத்தையும் அலைகள் இவரூடு உணர்வாகும் தன்மையையும்தன் மொழியினூடு படிக்கும் மனதில் உணர்வாக்கும் முறையிலும்இதனை நாம் தெரியமுடிகின்றது. இவ்வாறுதான் இவரது அநேக கவிதைகள் இயங்குகின்றன.

சித்தாந்தன் கவிதைகளில் உள்ள சொற்களின் அமைவுகள் புதிய படிமங்களை மனதில் நிகழ்த்துகின்றன.புhதிய காட்சிகை விரிக்கின்றகன. புதிய உணர்வினைக் கிளர்த்துகின்றன. இத்தகைய புததிய கவிதை முறைமை தொண்ணூறுகளின் பின்னரான ஈழத்துக் கவிதைகளில் அதிகமாகத் தொனிக்கத் தொடங்கியிருக்கின்றது.
ஈழத்துக் கவிதைகளில் அநேகமானவை நிகழ்வுச் சித்திரிகப்பாகவோ காட்சி விரிப்பாகவோ அனுபவ இயம்புதலாகவோ கதை கூறுதல் போலவோதான் இருந்து வந்துள்ளன. ஒரு மரபாகவும் அந்த மரபின் தொடர்ச்சியாகவும் இன்றும் இவ்வாறு எழுதப்படும் கவிதைகள்தான் அதிகமாகவுள்ளது. நமது கவிதைப்பரிச்சயமும் அறிமுகமும் கூட இவ்வாறுதான் உள்ளது. எமது போராட்டமும் அது சந்தித்த வாழ்வும் கூட இத்ததகைய ஒரு கவதைப் பண்பையும் போக்கையும் உருவாக்கியுள்ளது எனபதையும் நாம் அவதானிக்க வேண்டும். வடிவங்களும் மாற்றங்களும் புதிய பண்புகளும் போக்குகளும் காலத்தோடு இணைந்தே உருவாகின்றன. எமது கவிதையில் இருந்த இத்தகைய பண்புகளும் இத்தகைய அடிப்படையிலானதே. இன்று இந்த தசாப்தத்தில் மாற்றமுற முயலும் போக்கு இவ்வாறானதே.

தொண்ணூறுகளில் பரிணமித்துள்ள புதிய கவிதை முறை, கவமனம் தான் உணர்வதை படிக்கும் மனதும்உணர்வதான கவிதைகளாகத் தருகின்றது.ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை அல்லது ஒன்றை கவிமனம் உணர்வது போல படிக்கும் மனதும் சுயமாக உணர்வதை இக்கவிதை சொல்கின்றது. வாசகனை இருத்தி வைத்துப் போதிக்கும் மேல் நிலை – அதிகார நிலையை இக்கவிதை தகர்க்கின்றது. ஆனால், தெளிவும் ஒழுங்குமற்று சொற்குவியலாக எழுதித் தள்ளப்படும் சில கவிதைகள்படிக்கும் மனதில் தங்கிவிடாமல் அழிந்துவிடும் அபாயமும் இதில் உண்டு. இங்கே செய்யப்படும் கவிதைகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. கவிதைகளலி; அதை ஒரு தொழிலல்நுட்பமாகப் பயின்று எழுதப்படும் கவிதைகளும் உண்டு. இப்படி எழுதப்படும் கவிதைகளில் கவிதையின் இயல்புத்தன்மை அழிந்து, சூழலிலின் அடையாளம் தவறி, பண்பாட்டின் முகம் மாறி, காலத்தின் தடங்கள்மங்கி, இயந்திரத்தன்மை கூடி விடுகின்றது. இது படைப்பின் இயல்பையும் அதன் அடிப்படையான உயிர்ப்பு நிலையையும் இழந்து விடுகின்றது. ஆனால் சித்தாந்தன் தன் கவிதைகளில் இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு செயற்படுவதை நாம் உணரமுடிகின்றது.

தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் எழுத்தில் இயங்கத் தொடங்கிய சித்தாந்தன் கடந்த மூன்று ஆண்டுகளுள் எழுதிய கவிதைகள் இவை. எழுதத்தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே தொகுதியாக வெளிவரும் சாத்தியம்ஒரு படைப்பாளிக்கு நமது சூழலில் கிடைப்பது அரிது. அது சித்தாந்தனுக்கு வாய்த்திருக்கின்றது. இது மகிழ்ச்சியை அளிக்கின்றது. இந்த மூன்று வருடங்களில் ஈழக்கவிதை மரபின் தொடர்ச்சியாகவும் அதில் இருந்து முன்னே பாய்வதாகவும் தன் கவிதைகளை எழுதியுள்ளார் சித்தாந்தன். பிரதிபலிப்புக்களும் சுயஆக்கமுமாக ஒரு தொடக்க நிலைப்படைப்பாளியின் இயல்போடு வெளிக்கிளம்பியுள்ள சித்ததந்தானின் கவிதைச் செயற்பாடுபுதிதான அடையாளத்தைப் பெறத்தொடங்கியுள்ளது. எழுதப்பட்ட காலவரிசை ஒழுங்குபடுத்தப்படாவிட்டாலும் கவிதைகள் அதைக்காடடுகின்றன. அதேவேளை சித்தாந்தன் புதிய விடயங்களை நோக்கிச் செல்வவேண்டிய அவசியத்தையும் இக்கவிதைகள் உணர்த்துகின்றன.

கவிதை அறம் சார்ந்ததும் அறிவார்ந்ததுமான ஒரு செயற்பாடு என்பதில் சித்தாந்தன் தெளிவாக இருக்கின்றார். வாழ்வை நோக்குவதிலும் அதனை இயம்புவதிலும் கவிதை முக்கியமாகத் தொழிற்படுகின்றது. தீவிர அக்கறையின் பாற்பட்ட அவதானிப்பும் சிந்திப்பும் கவிதையிலும் அமைந்திருக்கின்றது. கவிதை வாசிப்பிலும்இந்தப்பிரக்ஞையும் அவதானிப்பும் அவசியமாகின்றது. அக்கறையற்ற வாசிப்பில் கவிதை வாசகனை விட்டு வெகுதொலைவில் விலகி நிற்கின்றது. அக்கறையின் தளத்தில் இயக்கம் கொள்ளும் கவிதை காலம், சூழல் என இரண்டும் இணையும் புள்ளியில் மனித மனத்தில் உருவாக்குகின்றது. சித்தாந்தன் இந்தப் புரிதலுடன் தன் கவிதைச் செயற்பாட்டில் இயங்குவதை புரிந்து கொள்ள முடிகின்றது.

தமிழ்க் கவிதைப் பரப்பு பெரியது. பல நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்வது. ஆனால், இன்றைய தமிழ்ச் சூழலில் கவிதைகளுடனான அறிடுமுகமோ பரிச்சயமோ மிகமிகக் குறைவாகவே இருக்கின்றது. நமது வராலற்றினையும் வாழ்வினையும்நமது கவிதைகளே அநேகமான தருணங்களில் பதிவு செய்து வந்திருக்கின்றன. இவை பற்றிய நோக்கினையும் பேசி வந்துள்ளன. எமது கவிதைக்கு பெரும் சரித்திரப்பின்னணி இருக்கின்றது. இன்றைய கவிஞனுக்கும் படைப்பாளிக்கும் இந்த அறிதல் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

எந்தப்படைப்பும் ஒரு சரித்திரப்பின்னணியுடனேயே படைப்பாக்கம் பெறுகின்றது.எழுதப்படும் போதும் எழுதப்படுவதை ஏற்கப்படும் போதும் இந்தச் சரித்திரப்பின்னணி முக்கியமாக இருக்கின்றது. எமது சரித்திரப் பின்னணி இன்று அரசியற் கவிதகளை (கவிதையில் அரசியல் கவிதை, பிறகவிதை என்ற அடையாளங்களோ இல்லை. நேரிடையாகவும் வெளிப்படையாகவும் அரசியல் பிரச்சினைகளையும் அரசியல் கருத்துருவங்களைம் சார்ந்தும் பிரதிபலித்தும் இயங்கும் கவிதைகளை இங்கே ஒரு புரிதலுக்காக அரசியல் கவிதைகள் எனக்குறிப்பிடுகின்றேன்) எழுதும்படி கவிஞனைத் தூண்டுகின்றது. அரசியல் கவிதைகளுக்கான எதிர்பார்க்கையும் வாசகனிடத்தே அதிகமாகவுள்ளது.

சித்தாந்தனின் காலத்தின் புன்னகையிலும் இந்தச் சரித்திரப் பின்னணியும்அதனாலான அரசியல் கவிதைகளும் இடம்பெறுகின்றன. போரையும் போர் வாழ்வையும்ஈழப்போராட்ட வாழ்வின் முகத்தையும் இந்தக் கவிதைகளில் பல உணர்தளமாக கொண்டவை.இனவாத அரசியலின் உக்கிரத்தை எதிர்த்து நிற்பவை. இந்த அரசியலின் கபடத்தனத்தை புலப்படுத்தும் ஒளிப்பொறியானவை.

இந்தத் தொகுதியில்அரைவாசிக்கு மேலான கவிதைகள் அரசியல் பிரச்சினையின் உணர்வுகளே. அவர் தன் கவிதையில் கொண்டுள்ள உணர்வை (விசயத்தை)பிற கவிதைகள் எழுதியிருந்தாலும் இவரிடம் அவை வெளிப்பாடடையும் விதம் வேறானவை. புதியவை. கவனிக்கத்தக்கவை. உயிர்ப்புள்ளவை. உதாரணமாக ஆட்களற்ற கிராமத்தை சித்தாந்தன் உணரும் விதத்தை மனிதர்களற்ற கிராமத்தின் கதையில் காணலாம்.

அரசியல் நேரடியாக வாழ்வைப் பாதிக்கும்போதும் அது சிதைச்த வாழ்வைப் பாதிக்கும்போதும்கவி மகதில் பெறும் உணர்தல் கவிதையிலும் அமைந்து விடுகின்றது. சித்தாந்தனின் கவிதைகள் பலவற்றிலும் உள்ளதீவரம் அதிவேகமாகச் சுழலும் மாபெரும் சக்கரமாகி நமது உணர்தாளத்தை அத்தனை வலுவுடன் தாக்குகின்றது. சுiலும் சக்கரத்தின் இயங்கு மையமாக வரின் கவிதை மொழி உணர்வு கொள்கி;றது.

இதனைப் புரிந்து கொள்வதற்கு புதிய முறையிலான கவிதை வாசிப்பு இங்கே அவசியமாகின்றது. வாசக அறிவாற்றலையும்உணர்திறனையும் மனதின் இயங்கு முனைகளையும் வேண்டி நிற்கின்றன இவ்வாறான கவிதைகள். இந்தக் கவிதைகளுடன் பயணிக்க முடியாத ஒரு படிப்பாளன் மிகவும் தேங்கிய நிலையிலேயே இருக்க வேண்டியிருக்கின்றது.அதேவேளையில் அவன் மொழியினதும் சிந்தனையினதும்உணர்முறையினதும் இயக்கத்தை தவறவிட்டவனுமாகினறான். சித்தாந்தன் மொழியினூடேயும் உணர்முறையிலும் வலுவோடு ஊடுருவிச் செல்கின்றார்.


சித்தர்தனின் அநேக கவிதைகளில் இன்னொரு அம்சமும் உண்டு. எதிர்வெளியில் பாத்திரத்தைச் சிருஷ்டித்து அதனுடன் உறவாடுகின்றார். சில சந்தர்ப்பங்களில் அந்தப் பாத்திரத்துடன் மோதுகிறார்.தருணங்களில் விலகுகின்றார். குற்றம்சாட்டுகின்றார். பிடிவாதமாக நிற்கின்றார். தழுவுகின்றார். சரித்து வீழ்த்துகின்றார். இப்படி பல வண்ணங்களில்தான் சிருஷ்டித்த பாத்திரத்துடன் அவரது உணர்தல் நிகழ்கின்றது. இந்தப் பாத்திரம் தருணங்களில் வேறுவேறு தளங்களுக்குத் தாவி வௌ;வேறு இயல்புடன் நிற்கின்றது.அது சித்தாந்தனின் காலத்திலும் சூழலிலும் இயங்கிக் கொண்டிருக்கும் அவரைப் பாதிக்கும் மையமே. இதுவெளைகளில் பல பாத்திரங்களாக புலப்படுவதையும் நாம் உணரலாம். இது சித்தாந்தனுக்கு மட்டும் நேரும் நிலைமையல்ல. நமக்கும் கூட இப்படித்தான் நேர்கின்றது.

ஒரு தொகுதியில் படைப்பாளியின் மனவுலகுநிச்சயமாகப் புலப்பட்டே தீரும். இங்கேயும் சித்தாந்தனின் மனவுலகு நன்கு தெரிகின்றது.அவசியமான இடைவெளி,மௌனப் பிரளயம், எதிலும் நானில்லை, ஆதியிலிருந்து எனது வருகை, ஆகிய கவிதைகள் புலப்படுத்துகின்றன.

நீ இன்னும்
உன் சிறகுகளின் வலிமைக்கு
என்னை வலிந்திழுக்கிறாய்
நீ போய் விடு
தொடமுடியாத தூரமாயே
எம் இடைவெளி இருக்கட்டும்

என்று தன்னை நிலைப்படுத்தும் சித்தாந்தன்நம்மிடம் தன்னை மிக நிதானத்தோடு இருத்திவிடுகின்றார். பல பரிமாணங்களுடைய இக்கவிதைவரிகளினூடே எண்ணங்களாயும் உணர்வாயும் விரியும் இயல்போடிருக்கின்றன. இவ்வாறு பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. மனித உறவு, இயற்கை மீதான பிரியம், மனம் தாவும் வெளிகள் எனப் பல கோலங்களைக் காட்டும் கவிதைகள் பல இவரின் கவிதைப்பரப்பை உணர்த்துகின்றன.

சமகால ஈழத்துக்கவிதைகள் ஒரே சுழலிலேயேவாசகனை அழைத்துச் செல்கின்றன.சித்தாந்த் கவிதைகளிலும் இவ்வாறான நிலையிருந்தாலும்அவர் புதிய வெளிகளுக்கும் பயணிக்கின்றார். இந்தப் பயணிபபே இனி இவரின் கவிதையாகட்டும்.

இயக்கச்சி
2000.02.27