தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

உயிர் அறுபடும் வலி - தீபச்செல்வன் கவிதைகள்

Friday, August 13, 2010

- சித்தாந்தன்-

படைப்பு மனநிலை என்பது எப்போதும் ஒரு படைப்பாளியுடன் கூட இருப்பதில்லை. அது புறத்தாக்கங்களாலும் அகத்தாக்கங்களாலும் விழைவது. சாதாரணமாக உன்னத படைப்புக்கள் என்பவை உன்னதமான படைப்பு மனத்தின் பிரதிபலிப்புக்கள்தான். உன்னதமென இங்கு குறிப்பிடப்படுவது ‘புனிதம்’ என்ற பொருளிலல்ல. படைப்பூக்க மனநிலையையே. ஒரு படைப்பாளியின் மனதினுள் படைப்புக்கான அநுபவங்கள் பல இருக்கலாம். அவை எழுதப்படும் போது மிகச் சிறந்த படைப்புக்கான தருணங்களையும் இழந்துவிடலாம். வலிந்து புனையப்படும் பல படைப்புக்களின் தோல்விக்கு உந்துதலில்லாத மனநிலையும் ஒருவகைக் காரணிதான். தினமும் இணைய தளங்களில் காணக்கிடைக்கும் பல கவிதைகளும் பிற படைப்புக்களும் இந்த வகையிலேயே இருக்கின்றன. வலிந்து சொற்களால் கட்டப்படும் பல கவிதைகள் வாசக மனத்திற்கு சோர்வையளிக்கின்றன.
2000 ஆம் ஆண்டின் பின் கவிஞர்களாக அறியப்பட்டவர்களில் தீபச்செல்வனும் முக்கியமானவர். யுத்தகாலக் கொடூரத்தின் வலிகளால் நெய்யப்பட்ட கவிதைகள் அவருடையவை. கடந்த காலத் துயரின் பிரதி விம்பங்களாயிருக்கும் தீபச்செல்வனின் கவிதைகள் வாசக மனதின் உள்ளடுக்குகளுக்குள்; மாபெரும் மனிதத் துயராய்க் கவிகின்றன.
துரத்திக்கொண்டிருக்கும் யுத்தத்தின் கோர முகத்தையும் அதனால் ஏற்பட்ட வேதனைகளையும் இயல்பான மொழியில் தீபச்செல்வன் எழுதுகின்றார். சிதிலங்களிலிருந்து மீளவும் கட்டியெழுப்ப முடியாத உள்மனக் குமுறலாய் அவரின் கவிதைகளிருக்கின்றன. தீபச்செல்வனின் கவிதைகளின் இரண்டாவது தொகுப்பான ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. ஏற்கனவே காலச்சுவடு வெளியீடாகப் ‘பாதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்னும் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது.
பொதுவாக ஈழக் கவிதைகளின் திருப்புமுனைக்காலமாக எண்பதுகளைச் சொல்லலாம். அரசியல் ரீதியான மாறுதல்களும் பேரினவாதச் சிந்தனைகளும் தமிழ்த் தேசிய உணர்வூட்டமும் இக்காலத்திலேயே தீவிரம் பெற்றன. 83 இல் ஏற்பட்ட இனக்கலவரம் ஏற்படுத்திய மோசமான பாதிப்புக்கள் தமிழர்களின் மனங்களிலில் இன்னும் விலக்கமுடியாத வடுக்களாகவே இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தின் கவிதைகள் சமகாலத்தின் வன்முறை வடுக்களின் நேரடியான பிரதிபலிப்புக்களாகவிருந்தன. காட்சி விபரிப்புக்களாகவும் விபரணத் தன்மை கொண்டவையாகவும் பெரும்பாலான கவிதைகள் எழுதப்பட்டன. இயல்பு குலையாத யதார்த்தச் சித்திரிப்பு அநேக கவிதைகளிலும் காணப்பட்டன. எண்பதுகளில் நிகழ்ந்த வன்முறைகளின் சாட்சியங்களாகவும் ஆவண இலக்கியங்களாகவும் இக்கால கட்டக் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன.
தொண்ணூறுகளின் பின் எழுதப்பட்ட கவிதைகளிலேயே பூடகமான மொழி ஈழக்கவிதைகளில் முக்கியம் பெறுகின்றது. யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புக்களால்; நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும் அரசியற் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் வெளிப்படுத்த பூடகமான மொழி கவிஞனுக்கு தேவையானது. ஏனெனில் யுத்தத்திலீடுபடுபவர்களின் ஜனநாயக மறுப்புக் கொள்கை உயிர் அச்சுறுத்தலாக எப்போதுமிருந்துகொண்டேயிருந்தது. இதனால் கவிதைகள் ஒருவித இருண்மைத்தன்மையை நோக்கிச் சென்றன. உணர்வுபூர்வமான மொழிக்கு அப்பால் அறிவின் கூறுகளையும் கவிதை தனக்கானதாகக் கொள்ளத் தொடங்கியது. இத்தொடர்ச்சி இன்று வரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தீபச்செல்வனின் கவிதைகள் எண்பதுகளின் சாயல்களுடனும் அதேவேளை தொண்ணூறுகளின் கவிதைப் போக்கையும் உள்வாங்கியிருக்கின்றன. காட்சி விபரிப்புக்களாகவும் கதை கூறலாகவும் சம்பவச் சித்திரிப்புக்களாகவும் விபரண மொழிதலாகவும் தீபச்செல்வனின் கவிதைகளிருக்கின்றன. யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தின் அநேக நிகழ்வுகளை அவரின் கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஒரு கவிஞனுக்கான தார்மீகக் கடமையும் ஒரு வரலாற்றுப் பதிவாளனுக்கான பொறுப்பையும் அவர் தன்னுடையதாகக் கொள்ளுகின்றார். இதனாலத்தான் சொற்களின் நீட்சி மிகைத்ததாய் கவிதைகளிருக்கின்றன. புற நிகழ்வுகளின் தாக்கங்களால் விளையும் மனச்சஞ்சலங்களி;ன் தார்மீக உணர்வுநிலை அவரை எழுதத் தூண்டுகின்றது. கவிதையின் வடிவம், நேர்த்தி சார்ந்து காட்டும் அக்கறையிலும் பார்க்க உணர்வின் வலிமையிலேயே அதிகமும் பிரக்ஞை கொள்ளுகின்றார்.
தீபச்செல்வன், தன்னை யுத்தத்தின் குழந்தையாகக் காணுகின்றார். யுத்தகாலத்தில் பிறந்த குழந்தை எதிர்கொள்ளும் துயரங்களும் நிச்சயமின்மைகளும் இழப்புக்களும் அவரையும் வதைக்கின்றன. பதுங்குகுழியின்; வெம்மையில் கருகும் அவரது மனம், விடுதலையை அவாவி நிற்கின்றது.
‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ என்னும் தீபச்செல்வனின் இரண்டாவது தொகுதிக் கவிதைகள், யுத்தத்தின் முகங்களையும் அது தருகின்ற நீக்க முடியாத துயரங்களையும் பேசுகின்றன. முழுமையும் யுத்தத்தால் சிதறடிக்கப்பட்ட மனநிலையின்பால் இயங்கும் இக் கவிதைகளின் மையத்தில் நிராதரவாக்கப்பட் கவிமனம் தொங்கிக் கொண்டிருக்கின்றது. மீளமீள கவியும் யுத்தத்தின் மீது வெறுப்பும் அதே நேரம் அதைவிட்டு விலகமுடியாமலிருப்பதன் வலியும் வெளிப்படுகின்றன. யுத்தம், ஒரு பூதாகாரப்பண்டமாக எல்லோர் கைகளிலும் திணிக்கப்பட்டிருப்பதை தீபச்செல்வன் எழுதுகின்றார். அவகாசங்கள் எதுவும் இல்லாமல் போர் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தின் கவிதைகளாக இத் தொகுப்பின் கவிதைகளுள்ளன.

“மூன்றாவது போர் முடிந்த பொழுது
எழுப்பப்பட்ட மாளிகைகளில்
மீண்டும் தகர்ப்பதற்கான
நாலாவது போர் ஒளிந்திருந்தது”

என ‘அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள்’ என்னும் கவிதையில் எழுதுகின்றார். போர் என்பதை வெறும் புறக்காட்சி அனுபவமாகக் கொள்ளாது அகத்திலும் அது படிய வைத்திருக்கும் காட்சிகள் எவ்வளவு கொடுமையானவை என்பது பரிந்து கொள்ளத்தக்கதே. போர்க்காலம் என்பது எந்த நம்பிக்கைகளையும் தந்துவிடாத சூழலில் யுத்தத்தின் பொய்யான நியாயப்படுத்தல்களும் உலர்ந்துபோய்விடுகின்றன.

இரவுகளும் பகல்களும் யுத்தத்தின் வெம்மையில் கருகி மணக்கின்ற போது கவிஞனின் குரலில் அவநம்பிக்கைகளும் துயரமும் இயல்பாகவே படிந்துபோய்விடுகின்றது. இரவுகளை கொண்டாடும் மனநிலை அறுந்துபோய் அச்சத்தை கொண்டுவரும் வாயில்களாக இரவுகள் மாறிவிடுகின்றன. ‘பெருங்கிடங்குகளில் புதைபடுகிற கால்கள்’ என்னும் கவிதையில்

“செய்திகள் சனங்களைத் தன்னுகிற இரவில்
ஒலிபடாத குரல் பாம்புப் பெட்டியில் அடைபடுகிறது”

என எழுதுகின்றார். சாவுச்செய்திகளால் அந்த இரவுகள் நிறைந்திருக்கின்றன. பிள்ளைகளை போருக்குக் கொடுத்த தாய்மாரின் மனங்களில் வெறும் பிரார்த்தனைகள் நிரம்பிவழிகின்றன. பிள்ளைகளைக் குரல்கள் எட்டாத போதும் அவர்களின் துயர அழுகை தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. இன்னொரு கவிதையில்

‘எல்லாவற்றையும் இழந்து
ஓடிவருகிற இரவு
மிருகத்தின் வாயில் சிக்குண்டுவிடுகிறது.’

என்கின்றார். இங்கு ஆறுதல் தரும் இரவே பறிபோய்விடுகின்ற துயரத்தை எழுதுகின்றார். தினமும் யுத்தத்தின் அதிர்வுகளால் சிதறடிக்கப்படும் மனத்தினை எதனால்த்தான் ஆறுதல்ப்படுத்த முடியும்? ‘இரவு மரம்’ என்னும் கவிதையும் விமானங்களால் சிதறடிக்கப்படுகின்ற இரவு பற்றிய கவிதையாகும்.

அச்சுறுத்தல்களால் நிரம்பிய நாட்களை தன் கவிதைகளில் தீபச்செல்வன் எழுதுகின்றார். காரணங்கள் தெரியாமலே மனிதர்கள் கொல்லப்படுவது சாதாரணமாகிவிட்ட நாட்களில் மரணம் ஒரு பிசாசாகி ஊரெங்கும் நகரமெங்கும் அலைந்து திரிவதையும் அதனால் ஏற்படும் அச்சவுணர்வினையும் ‘வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்’ என்ற கவிதையில்,

‘தூக்கம் குழம்பிய காலையில்
துப்பாக்கியால்
எழுதப்பட்ட சுவரொட்டி
அறையின் கதவினை
தட்டிக்கொண்டிருந்தது’ எனவும்

‘பேய்கள் ஓட்டுகிற
மோட்டார் சைக்கிள் என்னைப்
பின்தொடருகிற
மாலைக்கும் இரவுக்கும்
இடையில்
நான் மறுநாட் காலையை இழந்தேன்’

எனவும் எழுதுகின்றார். சாவுகளாலும் எச்சரிக்கைகளாலும் அச்சுறுத்தப்படுகின்ற பொழுதுகளில் எல்லாமே மரணத்தை நினைவுறுத்துகின்றன. மரணம் பற்றிய பீதி எல்லாவற்றறையும் இழந்தவிடச் செய்கின்றது. எங்கும் மரணமே பேருருக்கொண்டுவிடுகிறது.

தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு மையத்தை சுற்றி எழுதப்படுகின்ற வௌ;வேறான கவிதைகள்தான். எல்லாக் கவிதைகளின் மையமும் இழப்பினையே பெரும் பொருளாகக் கொண்டிருக்கின்றன. நிலங்கள் ஆக்கிரமிக்கப் படும்போதும் நண்பர்களை உறவினர்களை உடமைமைகளைப் பறிகொடுக்கும் போதும் அவரின் மனம் இழப்பின் எல்லையில் நின்று கதறுகின்றது.

இத் தொகுப்பின் பெரும்பான்மையான கவிதைகளும் சம்பவங்களை விபரிப்பனவாகக் காணப்படுகின்றன. கவிதைகளுக்கு இடப்பட்டிருக்கும் அடிக்குறிப்புக்களும் திகதிகளும் இதனைச் சுட்டுகின்றன. யுத்தத்தில் இடங்கள் பறிபோவதையும் தன் தாயும் சகோதரியும் இடம் பெயர்வதையும் எனப் பலவற்றை கவிதைகளின் அடிக்குறிப்பக்களாக் காணக்கடக்கின்றன. இது வரலாற்றுப் பதிவுக்கான அடிப்டையாக இருந்தாலும் . கவிதை வாசிப்பில் ஒற்றைப்படையான புரிதலையே நிகழ்த்தும் சாத்தியங்களை ஏற்படுத்துகின்றது. தீபச்செல்வன் கூறக் கருதியிருக்கும் விடயங்களுக்கு அப்பால் வாசகனின் மனம் பயணிப்பதற்கான எந்த விதமான வாசல்களையும் கவிதைகள் கொண்டிருக்கவில்லை என்பது வாசகனுக்கு இடராகவே அமையும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ‘யாருமற்ற தெருவினை மிதிக்கிற கொடு நிழல்,பெருங்கிடங்குகளில் புதைபடுகிற கால்கள்,நெருப்புத் தின்றுவிட்டிருக்கிற சாம்பல்,ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்,நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு’எனப்பல கவிதைகளும் அடிக்குறிப்பிடப்பட்ட கவிதைகளாகவேயுள்ளன. சம்பவங்களை மையப்படுத்தி கவிதைகள் எழுதும் முறை காணப்படுகின்றதுதான். ஈழத்திலும் அவ்வாற பல கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஒரு தொகுப்பில் அடிக்குறிப்புக்களோடு அநேக கவிதைகள் காணப்படுகின்றமை கவிதைப்புரிதல் மீது நெருடலை ஏற்படுத்துகின்றது. முன்னுரையில் சுகுமாரன் குறிப்பிடுவதைப்போல தீபச்செல்வனின் கவிதைகள் இருண்ட நாட்களின் நாட்குறிப்புக்களாகவுள்ளன எனச்சொல்லலாம்.

பொதுவாக, படைப்புக்கள் என்பவை மொழியினால் கட்டமைக்கப்படும் ஆக்கச்செயற்பாடுதான். எனினும் தேவையற்ற சொல்லாடல்களும் பொருத்தமற்ற அவற்றின் அமைவிடங்களும் நல்ல பொருளாழமிக்க கவிதைகளையே நீர்த்துப்போகச் செய்யும் சாத்தியங்கள் இருக்கினறன. தீபச்செல்வன் கவிதைகளிலும் இத்தகைய நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பல கவிதைகள் நீண்ட கவிதைகளாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையும் உணர்வுகளால் கொட்டப்பட்டிருக்கின்ற இந்தக் கவிதைகள் வாசகனோடான நேரடியான அனுபவப்பிணைப்னை ஏற்படுத்துகின்றன. தன் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வடிகாலாகவே தீபச்செல்வன் கவிதைகளைக் கருதுகின்றார். இதனால்த்தான் கவிதை அறிவும் உணர்வும் கலந்துருவாகும் வடிவம் என்பதனைவிடவும் உணர்வனின் வடிவமாகவே கொள்ளுகின்றார். இதனால் கவிதை மொழியின் முக்கியத்துவம் பற்றியும் இறுக்கம் பற்றியும் அதிகளாவான முக்கியத்துவத்தைக் கொடுக்காதவராகக் காணப்படுகின்றார்.

‘தாகம் காய்கிற நதிக்கான கனவு’ என்ற கவிதையின் இறுதிவரிகளை இதற்கு உதாரணமாகச் சுட்டலாம்.

தண்ணீருக்கான வழிகள்
அடைபட்டடிருக்க
வாழ்வின் கனவின் நதி இனியொரு இரவில்
முற்றுகை அதிகரித்த காட்டினுள்
மீளப் பெயர்ந்து பாய்கிறது.’

இவ்வரிகளில் “இனி” என்ற சொல் எதிர்காலத்தை சுட்டிவருகிறது. ஆனால் கவிதை “பாய்கிறது” என நிகழ்காலத்தில் முடிகிறது. இவ்வாறமைவது சொற்களின் அர்த்தத்தைச் சிதைத்துவிடுவதாகவுள்ளது. “இனியொரு” என்ற சொல்லை நீக்கிவிட்டு கவிதையை வாசிப்பின் வாசிப்புக்கு எவ்வித இடையூறும் ஏற்றபடவில்லை. அல்லது அச்சொல் “இன்னொரு” என அமைந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

இதனைவிட ‘பயங்காவாதிகளும் பதுங்குகுழிகளும்’ என்ற கவிதையில்,

‘நமது ஓலங்களிற்குள்
பெருகும் குருதி ஆறுகளிற்குள்
சந்தைகள் பரவி நிகழ்ந்தன.”

எனவருகின்றது. இந்த வரிகள் பொருட் குழப்பம் தருகின்ற வரிகளாகவுள்ளன. “சந்தைகள் பரவி நிகழ்ந்தன” என அதன் முடிவு முன்னைய வரிகளுடன் எவ்விதத்திலும் ஒட்டாது விலகியே நிற்கின்றது. “நிகழ்ந்தன” என்னும் சொல் “நின்றன” என அமைந்திருப்பின் பொருட் புலப்பாட்டுக்கு ஓரளவாவது இடையூறாக அமைந்திருக்காது. இத்தகைய சிக்கல்கள் பல கவிதைகளில் காணப்படுவதால் சொற்களை நேர்த்திப்படுத்தி கவிதைகளைச் செம்மைப்படுத்த வேண்டிய தேவை அவருக்கிருக்கின்றது. அவ்வாறு இல்லாதுவிடின் வாசகனே சொற்களை ஒழுங்குபடுத்தி வாசிக்க வேண்டிய தேவையை கவிதைகள் ஏற்படுத்தும் நிலையேயிருக்கின்றது.

தீபச்செல்வன் கவிதைகள் பலவற்றில் கவித்துத்தன்மையில்லாத வரிகள் பலவற்றைக் காணமுடிகின்றது. சாதராணமாகப் புளக்கத்திலுள்ள சொற்களைக் கவிதைக்காக உடைத்துடைத்துப் போட்டு கவிதையென்னும் புனைவுருவை ஏற்படுத்துகின்றார். இதற்கு உதாரணமாக ‘கிளிநொச்சி’ என்னும் கவிதையினைக் குறிப்பிடலாம். யுத்தத்தால் எப்போதும் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நகரம் என்பதால் அந்த நகரத்துக்கு வரலாற்றடிப்படையிலான முக்கியத்துவங்கள் பல காணப்படுகின்றன. தீபச்செல்வனின் கவிதையும் அம்முக்கியத்துவத்திற்கான காரணங்களை கோவைப்படுத்துகின்றன. இவ்வடிப்படையில் இக்கவிதையின் பரிமாணம் முக்கியத்துவமானதுதான். எனினும் கவிதையாக அதனை எழுதும் போது கவித்துவத்தினை எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததே. அவரின் நகரங்கள் சார்ந்த அனுபவப்பகிர்வுகள் மிக முக்கியமானவை. முதற்தொகுதியான ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பில் ‘யாழ் நகரம்’ என்னும் சிறந்த கவிதையினை எழுதியிருக்கின்றார். இக்கவிதை யுத்தத்தாலும் மரணங்களாலும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தின் நெருக்கடிமிக்க காலத்தை உணர்வோட்டத்துடன் பிரதிபலிக்கின்றது.யாழ்பாணம் பற்றிய அப்போதைய நிலையை,

‘ஒரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி: யாழ். நகரம்’

எனச் செறிவடர்த்தி மிக்க வரிகளால் படிமப்படுத்துகின்றார். மனிதர்கள் இனங்காணப்படாதவர்களால் கொல்லப்படுவதும் சடலங்கள் இனங்காணப்படாமல் தெருக்களில் இருப்பதையும், கொல்லப்பட்டவனின் சடலம் மீது ஆயிரம் கதைகள் கட்டப்படுவதையும்,

‘எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?’

‘இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்க மாட்டீர்கள்
உங்களால் தொடர்ந்து
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்’ (பதுங்குகுழியில் பிறந்த குழந்தை)

எனப் பதிவுசெய்வதோடு மக்கள் உணவுப்பொருட்களுக்காக அல்லாடித்திரிந்த அந்த நாட்களின் அவலங்களையும் ஆயுதங்களால் குரலறுக்கப்பட்ட மக்களின் பெருந்துயரையும் மிக பிரக்ஞை பூர்வமாக எழுதியிருக்கின்றார். ஆனால் ‘கிளிநொச்சி’ நகரம் பற்றிய கவிதையில் உணர்வுபூர்வமான சொல்லாட்சி காணப்படவில்லை. மாறாக வெற்று வரிகளே பெரிதும் நிறைந்திருக்கின்றன,

‘இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார்சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்’

‘பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்ததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை’

இவ்வரிகள் கவிதைக்கான மொழியாகப் பரிமாணம் பெறாது வெற்றுச் சொற்களாகவே எஞ்சி நிற்கின்றன. வெறும் சம்பவங்களின் கோர்வையாகக் கவிதையாகிவிடுகின்றது.

இத்தெகுப்பில் பல நல்ல கவிதைகளாகவும் கவித்துச்செழுமையை கொண்டுள்ள கவிதைகளாகவும் சிலவற்றைக் குறிப்பிடலாம். ‘துண்டிக்கப்பட்ட சொற்கள்,வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்,அழிப்பதற்குப் பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள்,பாம்புகள் பரிசளித்த சவப்பெட்டிகள்,இரவு மரம், நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு,பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும்’ இவ்வாறாகக் கொள்ளலாம்.

ஒரு காலகட்டத்தின் மாபெரும் மனிதத்துயரைப் பதிவு செய்திருக்கின்றன என்ற சிறப்பும் முக்கியத்துவமும் தீபச்செல்வனுக்கும் அவரது கவிதைகளுக்கும் உண்டு. ஆயினும் வெளிவந்திருக்கும் அவரின் இரண்டு கவிதைத்தொகுதிக் கவிதைகளும் வெளிப்பாட்டு முறையில் ஒத்தேயியங்குகின்றன. இத்தகைய முறையிலான கவிதை கூறல்முறையிலிருந்து மாறவேண்டிய தேவை அவருக்கிருக்கின்றது. அம்மாற்றம் தீபச்செல்வனின் கவிதைகளுக்கு மேலும் செழுமையையும் முக்கியத்துவத்தினையும் ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

நன்றி- காலம்